லேபிள்கள்

26.7.17

'தேர்ச்சி பெற்றால் மட்டும் வேலை கிடைக்காது' : இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அறிவுரை

'வெறும் தேர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்தால், வேலை வாய்ப்பு கிடைக்காது' என, இன்ஜி., மாணவர்களை, தனியார் நிறுவனங்கள் எச்சரித்து உள்ளன.
தமிழகத்தில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளை, 600க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் நடத்துகின்றன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இக்கல்லுாரிகளில், பல்கலை வகுத்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வு நடைமுறைகள் அமலில் உள்ளன. ஆண்டுதோறும், இன்ஜி., முடிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களில், 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர், வேலை இல்லாமல் சிரமப்படுகின்றனர்.பல மாணவர்கள், தங்களின் படிப்பு தொடர்பான வேலைகள் இன்றி, ஏதாவது ஒரு அலுவலகத்திலோ, வணிக நிறுவனத்திலோ பணியாற்றும் நிலை உள்ளது. 
இது குறித்து, தனியார் நிறுவனங்களுடன், அண்ணா பல்கலை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, 'இன்ஜி., முடிக்கும் மாணவர்களுக்கு, முழுமையாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்' என, பல்கலை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
'இன்ஜி., படிப்பில் மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து பாடம் நடத்தினால், வேலை தர வாய்ப்பில்லை' என, நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தெளிவுபடுத்தினர். அத்துடன், தனியார் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பில், பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு உள்ளன.

இது குறித்து, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் கூறியதாவது:வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை பொறுத்தவரை, இன்ஜி., மாணவர்கள், அவர்களின் பாடப்பிரிவில், தகுதியான மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்களை நேர்முக தேர்வுக்கு அழைக்கின்றனர். அப்போது, மாணவர்களின் ஆங்கில மொழித்திறன், தொழில்நுட்ப அறிவு, தொலைநோக்கு சிந்தனை, சிக்கலான பணிகளையும் செய்து முடிக்கும் தனித்திறன் போன்றவற்றை பரிசோதிக்கின்றனர்.
எனவே, மாணவர்கள் தங்களது தனித்திறன் வளர்ப்பில் அக்கறை காட்டுவதோடு, எதையும் ஆராய்ச்சி நோக்கில் மேற்கொள்ளும் திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டும். 
அதற்கேற்ப, தேர்வு முறைகளை மாற்ற உள்ளோம். அதே போல், பள்ளிக் கல்வியிலும் மாணவர்கள் தயாராக வேண்டிய முறை குறித்து, கருத்து பரிமாற்றம் செய்வோம்.இவ்வாறு அவர் 
கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக