லேபிள்கள்

12.12.17

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தினமும் ரூ.10 லட்சம் அபராதம்

அங்கீகாரம் இன்றி பள்ளிகளை நடத்தினால், தினமும், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், 'செக்' வைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படுகின்றன. அதேபோல், 700க்கும் மேற்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளுக்கு, தமிழக பள்ளிக் கல்வி, தொடக்க கல்வி, மெட்ரிகுலேஷன் இயக்குனரகங்கள் மற்றும், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய கல்வி வாரியம் ஆகியவை சார்பில், தனித்தனியாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

சில பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ., மற்றும், ஐ.ஜி.சி.எஸ்.இ., எனும் கல்வி வாரியங்களின்அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை தவிர, 1,000க்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும் செயல்படுகின்றன.

இந்த பள்ளிகள், அங்கீகாரம் பெற்றது போல், இயங்கி வருகின்றன. அதனால், பல பெற்றோர், பல லட்சம் நன்கொடை செலுத்தி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர்.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறைக்கு, பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில், அவர் கூறி உள்ளதாவது:கட்டாய கல்வி சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்பட்டால், அவற்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மூட வேண்டும். எச்சரிக்கையை மீறி, மீண்டும் நடத்தினால், ஒரு நாளைக்கு, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.

இதுகுறித்து, தமிழக பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தி, அங்கீகாரத்தை சோதனையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக