லேபிள்கள்

10.12.17

சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பவர்களுக்கு இனி... காலை கைது; மாலை விடுவிப்பெல்லாம் கிடையாது குற்றப் பத்திரிகையுடன் நடவடிக்கையும் பாயும்

தமிழகத்தில், போராட்டங்களில் ஈடுபடுவோரை, காலையில் கைது செய்து, மாலையில் விடுவிக்கும் நடைமுறை மாறுகிறது. சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முயல்வோர், உடனுக்குடன் சிறையில்
அடைக்கப்பட உள்ளனர்; அவர்கள் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக காவல் துறை, இம்முடிவை எடுத்துள்ளது. தமிழகத்தில், போலீசாரிடம் அனுமதி பெற்ற இடங்களில், போராட்டம் நடத்த தடை ஏதுமில்லை. அந்த இடங்களில் போராட்டம் நடத்துவோருக்கு, போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர். ஆனால், சில அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர், தங்கள் சுயநலத்திற்காக, பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை துாண்டிவிட்டு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடச் செய்து, சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து வருவதாக, போலீசார் கூறுகின்றனர்.

இதனால், இனி போராட்டத்தில் ஈடுபடுவோரை, காலையில் கைது செய்து, மாலையில்விடுவிக்கும் நடைமுறையில், மாற்றம் கொண்டு வரப்படுகிறது. விஷமத்தனமானவர்களின் துாண்டுதலின்படி, போராட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

இது குறித்து, போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் நடக்கும், 90 சதவீத போராட்டங்களுக்கு பின்னணியில், சிலரது சதிச்செயல்கள் உள்ளன. அவர்கள், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க, பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை துாண்டிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர். விஷம கும்பலின் துாண்டுதலால், போராடுவோர் உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர். அவர்கள் மீது, விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தொடர் நடவடிக்கையும் இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக