லேபிள்கள்

12.12.17

‘நீட்’ தேர்வை எதிர்கொள்வதற்கு இலவச பயிற்சி புத்தகங்களை வழங்க முடியாதா? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

மாணவர்களுக்கு இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்க முடியாதா? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள பயிற்சி மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்க முடியாதா? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய அளவில் மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வில், தமிழக மாணவி அனிதா கலந்துக்கொண்டு தோல்வியடைந்தார். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த அவர் மனவேதனையில் தற்கொலை செய்துக் கொண்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து தமிழக மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு பயிற்சி வழங்குவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன? என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் ஒரு வழக்கு விசாரணையின் போது கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பயிற்சி மையங்களை தமிழகம் முழுவதும் தொடங்குவது தொடர்பாக கடந்த 5-ந் தேதி தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையை கோர்ட்டில் அரசு வக்கீல் தாக்கல் செய்தார்.

அந்த அரசாணையில், ‘நீட்’ உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டி தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 412 ஒன்றியங்களில் ரூ.20 கோடி செலவில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். ஒரு மையத்திற்கு 8 ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 3 ஆயிரத்து 296 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவர். சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி ஆகிய 6 மண்டலங்களில் ஏதேனும் ஒரு பள்ளியில் இருந்து அனைத்து மையங்களுக்கும் காணொளி காட்சி மூலமாகவும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதை படித்து பார்த்த நீதிபதி, ‘தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பயிற்சி மையங்களுக்கும் தலா 65 புத்தகங்கள் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பயிற்சிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக இந்த பயிற்சி புத்தகங்களை அரசால் வழங்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு நாளை (புதன்கிழமை) தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக