லேபிள்கள்

9.6.13

தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்

        2013  2014 ஆம் கல்வியாண்டில் நாளை பள்ளி திறக்கப்படவுள்ளது. இந்நாளில் தலைமையாசிரியர்களுக்குகாத்திருக்கும் பணிகளை மற்றவர்களும்  தெரிந்துகொள்ள நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1.      அரசின் நலத்திட்டங்களான விலையில்லா புத்தகங்களையும், நோட்டுகளையும், சீருடைகளையும், காலணிகளையும், புத்தகப்பைகளையும், . . . மாணவ, மாணவியர்க்கு வழங்க பதிவேடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு விலையில்லா திட்டதிற்கும் தனித்தனி பதிவேடுகளை வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.



2.      ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் வகுப்புகளின் எண்ணிக்கையை ஆசிரியர்களின்ஒத்துழைப்புடன் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
3.      ஆசிரியர்களைக் கலந்தாலோசித்து, அவர்களுக்கு பாடங்களையும், வகுப்பாசிரியர் பொறுப்பையும் ஒதுக்கீடு செய்து கால அட்டவணை தயார் செய்துக்கொள்ளுங்கள்.
4.      ஆசிரியர் இல்லாத பாடங்களை நடத்த கலை / ஓவிய / நெசவு / இடைநிலை / உடற்கல்வி ஆசிரியர்களின் ஒத்துழைப்பை நாடுங்கள்.
5.      ஊராட்சி மன்றம், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எம்.டி.சி., எஸ்.எம்.சி., தன்னார்வல இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், . . . போன்றவற்றின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளுங்கள்.
6.      தொடக்கப் பள்ளிகளிலிருந்தும், நடுநிலைப் பள்ளிகளிலிருந்தும் வந்து சேர உள்ள 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்கும் பொறுப்பை, ஆர்வமுள்ள, ஒரு சில ஆசிரியர்களிடம் ஒப்படையுங்கள்.
7.      தொடக்கப் பள்ளிகளிலிருந்தும், நடுநிலைப் பள்ளிகளிலிருந்தும் வந்து சேர உள்ள 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்குBridge Course நடத்த திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள்.
8.      முதல் நாள் இறைவணக்கக் கூட்டத்தில், சென்ற ஆண்டு அரசுப் பொதுத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி காட்டிய ஆசிரியர்களையும், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளையும் பாராட்டுங்கள்.
9.      ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கும், பாட ஆசிரியர்களுக்கும், வகுப்பாசிரியர்களுக்கும் வழங்கத் தேவையான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டிற்கான படிவங்கள் மற்றும் பதிவேடுகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
10.  வகுப்பு வாரியாக, இனவாரியாக மாணவ, மாணவியர் எண்ணிக்கையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
11.  சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியர் எண்ணிக்கையை, வகுப்பு வாரியாக, இனவாரியாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
12.  மாற்றுத்திறனாளிகள், தந்தையை இழந்தவர்கள், பெற்றொரை இழந்தவர்கள், . . . போன்றவர்களின் வகுப்புவாரியான பட்டியல் தயாரிக்க ஆவன செய்யுங்கள்.
13.  தேவையான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பஸ் பாஸ் பெற்றுத் தர ஆவன செய்யுங்கள்.
14.  ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கும், பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் பெற்று வழங்கவும், வங்கிக்கணக்குத் துவங்கவும் தேவையானவற்றைப் (புகைப்படம், குடும்ப அட்டை ஒளிநகல், விண்ணப்பம் ...) பெற திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள்.
15.  அரசிடமிருந்து மாணவ, மாணவிகளுக்கு இன்னும் பிற நல திட்டங்களைப் பெற்றுத் தரத் தேவையானதைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
16.   சென்ற ஆண்டுப் பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு குறித்து ஆலோசனை செய்து, இவ்வாண்டு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு உயர என்ன செய்யலாம் என திட்டம் தீட்டிக் கொள்ளுங்கள்.
17.  சென்ற ஆண்டுப் பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட மற்றும் நம் பள்ளியின் தேர்ச்சி விழுக்காட்டினையும், முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் பெயர்களையும் அறிவிப்புப் பலகையில் எழுதி வையுங்கள்.
18.  ஊராட்சி மன்றம், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எம்.டி.சி., எஸ்.எம்.சி., தன்னார்வல இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், . . . போன்றவற்றின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஊரில் உள்ள முக்கியமானவர்கள் கூட்டத்தைக் கூட்டி, சென்ற ஆண்டு அரசுப் பொதுத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி காட்டிய ஆசிரியர்களையும், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளையும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஆசிரியர்களையும், நல் உள்ளங்களையும் பாராட்டி, பரிசு வழங்குங்கள்; வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
19.  பள்ளி வளர்ச்சிக்கு உதவ காத்திருக்கும் நல் உள்ளம், தொண்டுள்ளம் கொண்டவர்கள் பட்டியலைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
20.  பள்ளி விழாக்கள், இலக்கிய மன்றக் கூட்டங்கள், பாட இணைச் செயல்பாடுகள், சாரண இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம், பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், நுகர்வோர் இயக்கம், . . . போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள்.
21.  பள்ளியின் அடிப்படை விவரங்களைத் திரட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
22.  ஆசிரியர்களின் ஆண்டு ஊதிய உயர்வு நாள், சரண்விடுப்பு வழங்கிய நாள், பொது வருங்கால வைப்புநிதியிலிருந்து பெற்ற கடன்தொகை வழங்கிய நாள், ... ஆகியவற்றைத் திரட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
23.  பணியாளர்களின் பிறந்த நாள், மணநாள் ஆகியவற்றைத் திரட்டி வைத்துக்கொண்டு, அந்நாட்களில் அவர்களை வாழ்த்த மறக்காதீர்கள்.
24.  பள்ளியில் கொண்டாட வேண்டிய கல்வி வளர்ச்சி நாள், சுதந்திர தினம், குடியரசு தினம், மத நல்லிணக்க நாள், . . . போன்ற முக்கிய நாட்களைப் பட்டியலிட்டுக் கொண்டு, அவற்றைக் கொண்டாட திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள்.
25.  மூன்று உள்ளூர் விடுமுறை நாட்களை எப்பொழுது விட வேண்டியிருக்கும் என்பது குறித்து திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள்.
26.  ஒவ்வொரு வகுப்பிலும் மாணவ, மாணவிகளை சிறு குழுக்களாகப் பிரித்து, குழுத்தலைவரை நியமிக்கச் செய்து, பட்டியலிட வகுப்பாசிரியரைக் கேட்டுக்கொள்ளுங்கள். வகுப்பு வாரியாக அப்பட்டியல்களைப் பெற்று கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
27.  சிறிது கால இடைவெளிக்குப் பின், ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள, மெல்ல கற்கும் மாணவ, மாணவிகள், தெளிவாகப் படிக்கத் தெரியாத மாணவ, மாணவிகள் பட்டியலையும் பெற்று கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
28.  ஆசிரியர்களுக்கு வழங்க தொகுப்பு மதிப்பெண் பட்டியலும், மாணவ, மாணவிகளுக்கு வழங்க மாணவர் தேர்ச்சி முன்னேற்ற அறிக்கையும் தயார் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.
29.  வருங்கால சமுதாயம் நல்சிந்தனையோடும், ஒழுக்கத்தோடும், பொதுநல நோக்கோடும் செயல்பட மாணவ, மாணவிகளுக்குத் தேவையானவற்றை நல்கிடவும், அறிவுறுத்திக் கூறவும், நல்வழி காட்டிடவும், அல்வழி போகாதிருக்க ஆவனச் செய்யவும் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து அனைத்து ஆசிரியர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் கலந்தாலோசித்து நன்கு திட்டமிட்டுக்கொள்ளுங்கள். வருங்கால வலிமையான, சிந்தனை வளமிக்க, மிகச்சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நாமே! நம் பொறுப்பே!!
30.  சமுதாயச் சீர்கேடுகளைக் களைய வேண்டிய செயலை நாமே முன்னின்று செயல்படுத்துவோம்!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக