லேபிள்கள்

11.6.13

குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? எதிர்கொள்வது எப்படி?


         2 மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 

         விளையாட்டு, தொலைக்காட்சி, உறவினர் வீடு, சுற்றுலா இப்படி பல்வேறு வகையில் பொழுது போக்கிய மாணவர்களுக்கு மீண்டும் புத்தகம், படிப்பு, பரீட்சை என இன்று முதல் ஓட்டம் தொடங்குகிறது.
        இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் பள்ளி செல்லும் போதே சற்று சேர்வாக காணப்படும் மாணவர்கள், 2 மாத விடுமுறைக்குப் பின்னர் அதுவும் கூடுதலாக 10 நாள் விடுமுறை.

        இவை எல்லாம் முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்லும் போது குழந்தைகள் மனரீதியாக சந்திக்கும் சவால்கள் என்ன? அவற்றை பெற்றோரும், ஆசிரியர்களும் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

        இவை குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரன் பேட்டி அளித்தார்.

          அடம் பிடிக்க காரணம் "பிரிவு பயம்" : பள்ளிக்கு முதன் முதலாக செல்லும் குழந்தைகளுக்கு தான் பிரச்னைகள் அதிகம் என உளவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

          அப்பா, அம்மா என குடும்பத்தினர் அரவணைப்பில் மட்டுமே இருந்த குழுந்தை முதன் முறையாக புதியதொரு சூழலுக்குச் செல்லும் போது பிரிவு பயம் ஏற்படும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் கூட ஏற்படலாம். இதற்கு நல்ல தீர்வு முதன் முறையாக பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஆசிரியர்கள் அரவணைத்துக் கொள்வதே ஆகும் என மருத்துவர் தெரிவிக்கின்றார்.

        பிரிவு பயம் நீண்ட நாளாக இருக்கும் குழந்தைகளை அவர்களுக்கான மனநல மருத்துவர்களிடம் காட்டி சரி செய்தல் அவசியம்.

          பிரிவு பயம் இருக்கும் குழந்தைகள், பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கும் வகையில் வயிற்று வலி, பல் வலி என நாளுக்கு ஒரு நோவு ஏற்பட்டதாக கூறலாம். ஆனால் அதே வேளையில் குழந்தைகள் தொடர்ச்சியாக உடல் உபாதைகள் குறித்து கூறினால் அவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது.

          பெற்றோர்களே...தவறான வழிகாட்டுதல் கூடாது: வீட்டில் குறும்புத் தனம் செய்யும் குழந்தைகளுக்கு நம் வீட்டுப் பெரியவர்கள் முதலில் சொல்வது

          "நீ சேட்டை செய்தால் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுவேன். டீச்சரிடம் சொல்லி திட்டச் செய்வேன், அடிக்கச் சொல்வேன்"

             இது மிகவும் தவறான வழிகாட்டுதல். இவ்வாறு சொல்வதன் மூலம் சிறு குழந்தை மனதில் பள்ளிக்கூடம் என்பது ஏதோ சித்ரவதைக் கூடம் என தோன்றி விடும்.பெற்றோகள் எப்போதும் இவ்வாறான தவறான வழிகாட்டுதலை குழந்தைக்கு ஏற்படுத்தக் கூடாது. மாறாக பள்ளிக்கூடம் சென்றால் சக வயதில் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிதாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என எடுத்துரைத்து ஊக்குவிக்க வேண்டும்.

            ஆரியர்களுக்கும் பங்கு உண்டு: பள்ளிக்கு முதன் முதலாக வரும் குழந்தையாக இருக்கட்டும் இல்லை வளர்ந்த குழந்தையாக இருக்கட்டும் ஆசிரியர்கள் அனுகுவதற்கு எளிமையானவராகவும், பழகுவதற்கு இனிமையானவராகவும் இருக்க வேண்டும். கண்டிப்பு அவசியம் ஆனால் கடுமையான தண்டிப்பு தேவையில்லை. அடிப்பதோ, கடுமையான வார்த்தைகளால் குழந்தையை திட்டுவதோ நிச்சயம் சரியான அணுகுமுறை அல்ல. ஒரு குழந்தை உள ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதில் ஆசிரியர்கள் பங்கும் உண்டு.

          குழந்தையை பள்ளிக்கு கிளப்புவதும் ஒரு கலை: இன்றைய அவசர உலகத்தில் எல்லாமே எந்திரத் தனமாகி விட்டது. குழந்தையை பள்ளிக் கிளப்புவதும் கூட அப்படித் தான். அப்படி அல்லாமல் குழந்தையை பள்ளி செல்ல தயார் செய்வதை பெற்றோர்கள் உற்சாகத்தோடு செய்ய வேண்டும்.குழந்தையை திட்டிக் கொண்டே கிளப்பி விடுதல் கூடாது.

          குழந்தையை எழுப்பி விடும் நேரம், சிறு உடற்பயிற்சி, காலைக் கடன், குளித்தல், சரி விகிதத்தில் சத்தான உணவு, பழங்கள் ஆகியனவற்றை சாப்பிட வைத்தல் என திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

         வெளியில் விற்கும் உணவுப் பண்டங்களை உண்ணக் கூடாது, இருமினால், தும்மல் ஏற்பட்டால் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும், டாய்லெட் பயன்படுத்திய பின்னர் கைகைளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் போன்ற பொதுச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். அவற்றை பின்பற்ற குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளை இரவில் சீக்கிரம் தூங்க வைக்க வேண்டும்.

                பெற்றோர்களின் அன்பும், ஆசிரியர்களின் அரவணைப்பும் கிடைக்குமானால் எந்த ஒரு குழந்தையும் நிச்சயமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக