எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் முறைகேடுகளை தடுக்க, இனி டம்மி நம்பருக்கு பதிலாக ரகசிய குறியீடு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் தமிழ், ஆங்கிலம் தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட 10 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் போது எந்த தவறும் நடக்கக்கூடாது என்பதற்காக மாணவர்கள் எழுதிய தேர்வு பதிவு எண்ணை அகற்றிவிட்டு டம்மி நம்பர் கொடுக்கப்படுகிறது.
இதனால் எந்த மாணவருடைய விடைத்தாள், எங்கு மதிப்பீடு செய்வதற்கு செல்கிறது என்று கண்டறிய முடியாது. ஆனாலும், அந்த தாளை எளிதில் கண்டுபிடித்து விட முடியும் என்ற நிலை உள்ளது. இது போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில் அரசு தேர்வுகள் துறை, இனிமேல் டம்மி நம்பருக்கு பதிலாக தேர்வர்களின் விடைத்தாளிலேயே ரகசிய குறியீட்டை முதலிலேயே பிரிண்ட் செய்ய முடிவு செய்துள்ளது.
அந்த குறியீட்டை யாரும் சாதாரணமாக காண முடியாதபடி கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே அறியும்படி வடிவமைத்துள்ளனர். இதனால் எந்த விடைத்தாள் எங்கு மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற விவரம் யாருக்கும் தெரியாது. இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்ததும், வருகிற அக்டோபர் மாதம் நடக்க இருக்கின்ற தேர்விலேயே அமல்படுத்த அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக