லேபிள்கள்

17.9.13

தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில் பிழை டி.ஆர்.பி., தலைவர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன தேர்வில், அச்சுப்பிழையுள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் கோரிய வழக்கில், "ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதால், செப்.,18 ல் ஆஜராக வேண்டும்,' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு: 605 முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், ஜூலை 21 ல் தேர்வு நடந்தது. "பி' வரிசை வினாத்தாள்களில் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் பிரிவில் 150 கேள்விகள் இருந்தன. 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. 

உதாரணமாக, வினா 75 ல் "தமிா மொழி பெருமை மிக்க பழைய வரலாறு உடையதாகும் என்று உரைத்தவர்? 76 ல் "மதுரையை தென் தமிா மதுரை' என குறிப்பிடும் நூல்? என அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார்.

விசாரித்த நீதிபதி, ""தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக வேண்டும்,'' என்றார்.

நீதிபதி எஸ்.நாகமுத்து முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயகுமாரன் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர்கள் அறிவொளி, தங்கம்மாள் ஆஜராயினர்.

வாரிய செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு: வாரியம் கைப்பிரதியாக வினாத்தாள் தயாரித்து, ரகசியமாக அச்சடிக்கும். ஏதேனும் தவறுகள் உள்ளனவா? என அச்சுப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், வினாத்தாளின் முதல் பிரதியில் சரிபார்ப்பர். அதன்படி ",பி,சி,டி' என வினாத்தாள் வரிசைப்படுத்தப்படும்.

இத்தேர்வில் "பி' வரிசை வினாத்தாளில் பிழைகள் ஏற்பட்டுள்ளன. இத்தவறுக்கு, அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் பொறுப்பு. ரகசியம் கருதி, தேர்வு நாளன்று தான், வினாத்தாட்களை பிரித்து பார்ப்போம். அச்சடிக்கும் ரகசிய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

பிழைகள் இருந்தாலும், வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, பதிலளிக்கக்கூடிய வகையில், வினாக்கள் அமைந்திருந்தன. தேர்வு எழுதியவர்களின் வினாத்தாட்களை ஆய்வு செய்தோம். முதல் 10 ரேங்க் பெற்றவர்களில், 6 பேர் "பி' வரிசை வினாத்தாட்கள்படி, எழுதியவர்கள். மறு தேர்வு, கருணை மதிப்பெண் என்ற கேள்விக்கு இடமில்லை. மறுதேர்வால், ஏற்கனவே அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர், என குறிப்பிட்டார்.
நீதிபதி: பிழைகள் ஏற்பட்டிருந்தாலும், தேர்வு துவங்கிய 30 நிமிடத்தில், சரிசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஏற்கனவே, ஆசிரியர் நியமன தேர்வில் 73 கேள்விகளில் அச்சுப்பிழைகள் இருந்ததாக, வழக்கு தாக்கலானது. அப்போது, ஐகோர்ட் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியது. தேர்வு எழுதுபவர்களுக்கு, வினாத்தாட்களை அச்சடிப்பவர்கள் யார்? என தெரியாது.

பிழையின்றி வினாத்தாட்கள் தயாரிக்க முடியவில்லை எனில், டி.ஆர்.பி., தலைவர் அப்பதவியை வகிக்க தகுதியற்றவராகி விடுகிறார். அவர் ஏன் ஆஜராகவில்லை? ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, மனு செய்துள்ளாரா?


அரசு வக்கீல்: அவருக்கு முக்கிய வேலை இருந்ததால், ஆஜராகவில்லை.
நீதிபதி: பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க, இக்கோர்ட் உள்ளது. அச்சுப்பிழை எனக்கூறி, ஊழியர்கள் மீது பழியை சுமத்தி விட்டு, தப்பிக்க முடியாது. டி.ஆர்.பி., தலைவர் என்ற முறையில், சரிபார்க்கும் கடமை உள்ளது. அவரிடம் சில விளக்கம் பெற வேண்டியுள்ளதால், செப்.,18 ல் ஆஜராக வேண்டும், என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக