பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும் என
தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதோடு, பொதுத்தேர்வுகளில்
முறைகேடுகளைத் தடுக்கவும் தேர்வு நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் பல புதிய
நடைமுறைகள் வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதத் தனித்தேர்வுகளில் பரிசோதனை முறையில்
அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 10-ம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால்
மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தல் போன்றவற்றில் தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாக
ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் தரப்பில் புகார் எழுப்பப்பட்டு வந்தது.
இவற்றைத் தவிர்க்கும் வகையில்,
அரசுத் தேர்வுகளிலுள்ள நடைமுறையை எளிமைப்படுத்த அரசுத் தேர்வுதகள் துறை பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முதல் கட்டமாக, செப்டம்பர்
23-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, 10-ஆம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 சிறப்புப் பொதுத் தேர்வில் புதிய தேர்வு நடைமுறையை அறிமுகம் செய்ய முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மாணவர்களுக்கு தேர்வறையில்
புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும். 3 பகுதிகளாக (ஃப்ளை லீப்பாக)
இருக்கும். இதில் ஒரு பகுதி மாணவருக்கும், மற்றொரு பகுதி விடைத்தாள் திருத்தும்
மையத்துக்கும், 3-ஆவது பகுதி மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட ஒருங்கிணைப்பு
மையத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த விடைத்தாளில் மாணவர்கள் எத்தனை
பக்கங்கள் எழுதியிருக்கின்றனர் என அதற்குரிய இடத்தில் குறிப்பிட்டால் போதும்.
தேர்வு மைய
மேற்பார்வையாளருக்கும் பணிச்சுமை குறைவு. 20 நிமிஷத்தில் பண்டல் செய்து விடலாம்.
எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர்; தேர்வு எழுதாதவர்கள் எத்தனை பேர்;
முறைகேடுகளில் சிக்கியவர்கள் எத்தனை பேர் என்பதையும் எளிதாகக் கணக்கிட முடியும்.
விடைத்தாள் திருத்தும்
மையங்களில் 12 தாள்களாக எளிதாக பிரித்துக் கொடுத்து விடலாம். விடைத்தாள்களை
திருத்தியபின், மாணவர்களின் பார்கோடை பார்த்து மதிப்பெண்ணை பதிவு செய்தால் போதும்.
தனியாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை.
இதை 2014-ஆம் ஆண்டு ஏப்ரல், மே
மாதம் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு முதல்
நடைமுறைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக, கல்வித் துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
பரிசோதனை முறையில்
செப்டம்பர்-அக்டோபரில் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 சிறப்புப் பொதுத்
தேர்வில் இந்த தேர்வு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் மாவட்டத்துக்கு சுமார்
5 மையங்களில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவ, மாணவியரே தேர்வு எழுதவுள்ளனர். இந்தப்
புதிய நடைமுறையில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் உள்ளனவா என்பது போன்ற விவரங்கள்
அறியப்படும்.
இந்த அனுபவத்தைப் பொருத்து இந்த
புதிய நடைமுறையை 2014 அரசுப் பொதுத் தேர்வில் நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு
செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக மண்டல வாரியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வி
அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய தேர்வு முறையை
நடைமுறைப்படுத்துவது குறித்து மதுரை மண்டல அளவிலான கல்வி அதிகாரிகள் ஆலோசனைக்
கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர்
(மேல்நிலைக் கல்வி) ராஜராஜேஸ்வரி தலைமையில், மதுரை முதன்மைக் கல்வி அலுவலர்
சி.அமுதவல்லி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம்,
தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக