லேபிள்கள்

18.9.13

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குழந்தைகள் மீதான உரிமை மீறல் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வுப் பயிற்சி, குழந்தைகளும் ஆசிரியர்களும் அதிக விழிப்போடு இருக்க உதவும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
முதற்கட்டமாக, தமிழகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 60 பேருக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.17) பயிற்சி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்றுநர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.
இவர்கள் கருத்தாளர்களாக இருந்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பிற ஆசிரியர்களுக்குப் பயிற்சியை வழங்குவார்கள். ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் மாதம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

துளிர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியை வழங்குகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக