அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, அரசின் ஒப்புதலை, துறை கோரியுள்ளது.
தமிழகத்தில், 36,813 அரசு பள்ளிகளும், 8,395, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த, இரு தரப்பு பள்ளிகளிலும், புத்தக பை, வண்ண பென்சில்கள், கணித உபகரண பெட்டி, பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சைக்கிள் உள்ளிட்ட, 14 வகையான, இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் தொடர்பான கோப்புகளை பராமரிக்கும் பணி மற்றும் பள்ளி நிர்வாக பணிகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்டோர் ஈடுபடுகின்றனர். அரசு நல திட்டங்களை, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தடையின்றி வினியோகிக்கவும், பள்ளி நிர்வாகம் சிறப்பாக இயங்கவும், ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. பள்ளி கல்வித்துறை எடுத்த கணக்கெடுப்பில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 2,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்தது. இந்த பணியிடங்கள் அனைத்தும், ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள். எனவே, இந்த பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்குமாறு, கோட்டைக்கு, பள்ளி கல்வித்துறை, கோப்பு அனுப்பி வைத்தது. இது தொடர்பான கோப்பு, தற்போது, நிதித்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. "நிதித்துறை ஒப்புதல் அளித்ததும், முதல்வரிடம் ஆலோசனை பெற்று, இந்த பணியிடங்கள் நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "தற்போதைய, நிதி நெருக்கடியான சூழலில், புதிய பணியிடங்களுக்கு, கண்டிப்பாக, அரசின் அனுமதி கிடைக்காது. ஆனால், பழைய பணியிடங்களை நிரப்புவதில், அரசு அனுமதி அளிக்கும் என, நம்புகிறோம்' என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக