நெல்லை மாவட்ட பள்ளிகளில் தொடரும் பிரச்னைகளால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் தொடர்ந்து பிரச்னைகள் நிலவி வருகிறது.
செங்கோட்டை பள்ளியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். வள்ளியூர், மானூர் பகுதி பள்ளிகளிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் பலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வித் துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று ஆசிரிய சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.வள்ளியூர், ஊத்துமலை, தென்காசி உட்பட பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த விலையில்லா லேப்டாப்கள் திருடப்பட்டுள்ளன. இதனால் இப்பள்ளிகளிலும் பிரச்னைகள் நிலவி வருகிறது. பள்ளிகளில் தொடரும் பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டிகளை வைக்க அரசு உத்தரவிட்டும் எந்த பள்ளிகளிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பள்ளிகளில் சாதி, மத மோதல்கள் ஏற்படாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பிரச்னைகள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக அதிகாரிகள் சென்று விசாரணை செய்வதற்கு பதிலாக அவர்கள் தொடர்ந்து ஆய்வு கூட்டங்களிலேயே "பிசி'யாக இருக்கின்றனர். இதனால் பிரச்னைகள் தொடர் கதையாக நீடித்து வருகிறது. தற்போது பள்ளிகளில் பி.எட் ஆசிரிய பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளிடம் குறிப்பிட்ட தொகை அல்லது கம்ப்யூட்டர், பிரிண்டர், பீரோ, மேஜை, நாற்காலிகள் உட்பட பல்வேறு உபகரணங்களை வாங்கித் தர வேண்டும் என தலைமை ஆசிரியர்களால் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் தெரிவிக்கப்படுவதால் பிரச்னைகள் எழுந்துள்ளன.
எனவே, தொடரும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக