லேபிள்கள்

16.1.14

தனியார் பள்ளிகள், மருத்துவ மனைகளுக்கு "கிடுக்கிப்பிடி'

நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அரசிடமிருந்து உதவி பெறும் தனியார் அமைப்புகளை, ஜன் லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு
வர, டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு நன்கொடை கேட்டால், அதுகுறித்து, லோக்பால் அமைப்பிடம், பெற்றோர் புகார் செய்யலாம். டில்லி மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு, அதிரடியான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. லஞ்சம் மற்றும் ஊழல்களை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை, மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஊழலுக்கு எதிரான, ஜன் லோக்பால் மசோதாவை, அடுத்த மாதம், சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இதில், முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, அரசு உதவி பெறும் அமைப்புகளை, லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அரசிடமிருந்து, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நிதி அல்லது பிற உதவி பெறும், தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவை, லோக்பால் வரம்பிற்குள் வரும்.


இந்த பள்ளிகள், குழந்தைகளை சேர்ப்பதற்கு நன்கொடை கேட்டால், பெற்றோர், இதுகுறித்து புகார் செய்யலாம். அதே போல், அரசு உதவி பெறும் மருத்துவமனைகள், அதிகபட்ச கட்டணம் கேட்டாலும், அதுகுறித்து, நோயாளிகள், லோக்பால் அமைப்பில் புகார் செய்யலாம். இந்த புகார்கள் குறித்து, லோக்பால் அமைப்பு விசாரித்து, சம்பந்தப்பட்ட அமைப்புகள் மீது, நடவடிக்கை எடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக