லேபிள்கள்

5.2.15

ஓ.பி.சி. மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை

யுஜிசி என அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவானது ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டோருக்குப் பல்வேறு
விதமான கல்வி உதவித்தொகைகளை (Fellowship) வழங்கிவருகிறது.
தற்போது, முதல்முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OtherBackward Class-OBC) மாணவ-மாணவிகளுக்குப் புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

எம்.ஃபில். பிஎச்.டி. (முனைவர் பட்டம்) படிப்பதற்கு இந்த உதவித்தொகை கிடைக்கும். கலை, சமூக அறிவியல், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு உதவித்தொகை பெறலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.(விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி (சிஎஸ்ஐஆர்) நிறுவனத்தின் ஜெஆர்எஃப் உதவித்தொகை பெறக்கூடாது என்பது ஒரு நிபந்தனை). ஆண்டுதோறும் 300 ஓபிசி மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இதில் 3 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.தகுதி அடிப்படையில் தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் கிடைக்கும்.அத்துடன் எதிர்பாராத செலவுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும் (கலை படிப்புகள்), ரூ.12 ஆயிரமும் (அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம்) வழங்கப்படும்.

இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்பு கல்வி செயல்பாடுகள் திருப்தியாக இருக்கும்பட்சத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.28 ஆயிரம் கிடைக்கும். அதோடு எதிர்பாராத செலவினங்களுக்காகக் கலைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,500-ம், அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப்படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.இந்த உதவித்தொகை விண்ணப்பதாரரின் வங்கிக்கணக்குக்கு ஆன்லைனில் நேரடியாக (E-payment) வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வி ஆண்டின் உதவித்தொகையைப் பெறுவதற்கு வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.ugc.ac.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

ஓ.பி.சி. வகுப்பினர் யார்?
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின்குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்கும் நபர்கள் ஓ.பி.சி பிரிவின் கீழ் வருவார்கள். பி.சி (Backward Class ), எம்.பி.சி (Most Backward Class) பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்தைத் தாண்டிவிட்டால் அவர்கள் ஓ.பி.சி. வகுப்பினராகக் கருதப்பட மாட்டார்கள்.ஓபிசி வகுப்பினருக்கான சான்றிதழைத் தாசில்தார் வழங்குவார். இதற்கு உரிய படிவத்தில், தேவையான ஆவணங்களுடன் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக