லேபிள்கள்

4.2.15

பள்ளி மாணவர்கள் 5 பேர் கல்வியைத் தொடர அனுமதி: தலைமை ஆசிரியருக்கு உத்தரவு


அரசுப் பள்ளியில் மாணவியின் உணவைச் சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் கல்வியைத் தொடர, தலைமை ஆசிரியர் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
சூனம்பேடு அரசு பள்ளியில் எனது மகன் பிளஸ் 2 படித்து வருகிறான். எனது மகன் உள்பட சக மாணவர்கள் ஐந்து பேர், அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவியின் உணவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்துச் சாப்பிட்டதாக ஆசிரியர் திலகம் என்பவர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.

மாணவர்களை கண்டிக்காமல், தலைமை ஆசிரியர் போலீஸில் புகார் அளித்தார். பள்ளிக்கு வந்த காவல் ஆய்வாளர் கண்ணன், துணை ஆய்வாளர் திருநாவுக்கரசு மாணவர்கள் ஐந்த பேரை அடித்து விசாரித்துள்ளனர்.பிறகு, ஐந்து மாணவர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்து துன்புறுத்தியுள்ளனர். மறுநாள் மாணவர்கள் பள்ளிக்குச் சென்ற போது அவர்களை செல்ல விடாமல் மீண்டும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பள்ளிக்குச் சென்றால் சிறையில் அடைத்துவிடுவதாக மிரட்டினர். கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. அதனால், எனது மகன் உள்பட ஐந்து பேரை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் எம்.ராதாகிருஷ்ணன், பி.புகழேந்தி ஆகியோர் ஆஜராகினர்.மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிப்பதற்கு தலைமை ஆசிரியருக்கு மூன்று முறை வாய்ப்பு அளித்தும் அவர் பதில் அளிக்கவில்லை. எனவே, மாணவர்கள் ஐந்து பேரும் மீண்டும் படிப்பைத் தொடர தலைமை ஆசிரியர் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக