லேபிள்கள்

6.2.15

ஆசிரியர் தேர்வு வாரியச் செயலருக்கு உயர்நீதிமன்றம் விதித்த அபராதம் ரத்து

ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) செயலருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.


ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிராக ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அரசுக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் 36 மதிப்பெண்கள் பெற்று முழுத் தகுதி பெற்றிருந்தபோதும் தனக்குப் பணி வழங்கவில்லை. எனவே பணி வழங்க உத்தரவிடுமாறு குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு மீதான விசாரணையின்போது, மனுதாரர் பொதுப்பிரிவில் இடம் பெற்றிருந்தார். அதில் 2 பணியிடங்கள் இருந்தன. அதில் ஒன்று காது கேளாதவருக்கும் மற்றொன்று பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டன. எனவேதான் மனுதாரர் தேர்வு செய்யப்படவில்லை என வாரியச் செயலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் அதுகுறித்து விளம்பர அறிவிப்பில் குறிப்பிடவில்லை என்று கூறிய நீதிமன்றம், வாரியச் செயலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. இவ்வழக்கு நிலுவையில் இருந்தபோது மனுதாரருக்கு பணி வழங்கப்பட்டது.

இந்நிலையில், அபராதம் விதித்ததை மறுபரிசீலனை செய்யுமாறு, தேர்வு வாரியச் செயலர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் காதுகேளாதவருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனவே அது அறிவிப்பில் இடம் பெறவில்லை. இதை மனுவில் குறிப்பிட்டு இருந்தபோதும், நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் அபராதம் விதித்துள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த தகவலை கவனிக்காததால், முந்தைய உத்தரவில் தவறு ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்ததை ரத்து செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக