நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழுபறியால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்செயல்பாடுகள் முடங்கியுள்ளன.மத்திய அரசின், கட்டாய
கல்வி உரிமைச் சட்டம், 2009ன் படி, கல்வி வயதுடையஅனைவரும் கட்டாயம் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்; போக்குவரத்து வசதியின்மையை காரணம் காட்டி, கல்வியை தொடராமல் இருக்க கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு வாகனம் மற்றும் வழித் துணையாளர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வால்பாறை, கொடைக்கானல் உட்பட மலைக் கிராமங்கள், வனப்பகுதி நிறைந்த மாவட்டங்களில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.பஸ் வசதி இல்லாத மலை கிராம மாணவ, மாணவியரை பள்ளிகளுக்கு அழைத்து வர, தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரு மாணவனுக்கு 300 ரூபாய் வீதம், வாடகைவழங்க அனுமதி வழங்கப்பட்டது.
வாகனங்கள் சென்று வர முடியாத, அடர்ந்த வனப் பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவியரை பாதுகாப்பாக பள்ளிகளுக்கு அழைத்து வர, ஐந்து மாணவ, மாணவியருக்கு ஒருவழித்துணையாள் வீதம் நியமித்து, அவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்க அனுமதியளிக்கப்பட்டது.இதனால், வனப்பகுதி மற்றும் மலைக் கிராம மாணவ, மாணவியர் பலர் ஆர்வமுடன் பள்ளிக்கு வரத் துவங்கினர். நீலகிரியில் மட்டும், 3,700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயனடைந்தனர். கடந்த ஐந்து மாதங்களுக்கான வாடகை தொகை, பள்ளிகளுக்கு வழங்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதித்துள்ளது.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி முருகேசன் கூறியதாவது: வாகனம், வழித்துணையாளர் வசதியால், மாநிலம் முழுக்க, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயன் பெறுகின்றனர். ஊராட்சிப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், நிதி ஒதுக்கீடு சீராக இல்லை.இதனால், வாகன ஓட்டுனர்கள், வாகனங்களை இயக்க தயங்குகின்றனர்.
மாணவர் எண்ணிக்கைகுறைந்து விடக்கூடாது என்ற நோக்கில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை வாடகையாக கொடுத்து, மாணவர்களின் வருகையை உறுதிபடுத்தி கொண்டிருக்கின்றனர். இத்திட்டம் முறையாக செயல்பட, நிதி ஒதுக்கீட்டை தடையின்றி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறுகையில், "துறை ஒப்புதல் கிடைத்தவுடன், பள்ளிகளுக்கு நிதி வழங்கப்பட்டு விடும்" என்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக