லேபிள்கள்

31.3.15

காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு நியமனம் இல்லை: அவமதிப்பு வழக்கில் டி.என்.பி.எஸ்.சி.,க்கு கண்டிப்பு


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில், 3,484 கிராம நிர்வாக அதிகாரி, காலி பணியிடங்களை நிரப்ப, 2010, டிசம்பரில் விளம்பரம் வெளியிட்டது. எழுத்துத் தேர்வு முடிந்து, 2011 ஜூலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், குறிப்பிட்ட சிலரை, காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், காலியாக உள்ள, 352 இடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்க, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதையடுத்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த, ராமன் என்பவரை தவிர, மற்றவர்களை பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. சிலர் பணியில் சேர்ந்தனர்; சிலர் பணிக்கு வரவில்லை. இதையடுத்து, 'நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை' எனக் கூறி, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமாருக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை, ராமன், தாக்கல் செய்தார். இவ்வழக்கு, நீதிபதி நாகமுத்து முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.ராமசாமி, டி.என்.பி.எஸ்.சி., செயலர் தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர் தேவேந்திரன் ஆஜராகினர்.விடுவிக்க வேண்டும்:மனுதாரர் உட்பட, காத்திருப்போர் பட்டியலில் இருந்த, 81 பேருக்கு, பணி வழங்கப்பட்டு விட்டது என்றும், வழக்கில் இருந்து டி.என்.பி.எஸ்.சி., செயலரைவிடுவிக்க வேண்டும் என, கூடுதல் அட்வகேட் ஜெனரல் கோரினார்.

மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து, பிறப்பித்த உத்தரவு: 

காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்கும்படி, டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவையும், விதிமுறைகளையும் பின்பற்ற, டி.என்.பி.எஸ்.சி., தவறிவிட்டது. நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்த பின்னும், அதை ஏன் மதிக்கவில்லை என்பதை, புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வழக்கில், காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கு வேலை கிடைத்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பளத்தை இழந்துள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தின்படி இயங்கும், டி.என்.பி.எஸ்.சி., அரசு நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., மெத்தன போக்கு காட்டியதை, வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருக்கவில்லை என்றால், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை, டி.என்.பி.எஸ்.சி., நியமித்து இருக்காது.

நீதிமன்ற அவமதிப்பு:
நீதிமன்ற உத்தரவுகளை அரசு மதிக்கவில்லை என்றால், அது சட்டத்தின் ஆட்சிக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் போலாகும். நீதிமன்ற உத்தரவை, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளார். 'எதிர்காலத்தில் விதிமுறைகளை பின்பற்றுபவர்' என, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அளித்த உறுதியை ஏற்று, வழக்கில் இருந்து, டி.என்.பி.எஸ்.சி., செயலரை விடுவிக்கிறேன். நிபந்தனையற்றமன்னிப்பை, டி.என்.பி.எஸ்.சி., செயலர் கோரியுள்ளார். எனவே, வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக