லேபிள்கள்

1.4.15

பிளஸ் 2 வேதியியல் பிழையான இரு வினாக்களுக்கு மதிப்பெண்

பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் பிழையுடன் கேட்கப்பட்ட இரண்டு ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
         பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு முக்கியப் பாடமான வேதியியல் பாடத் தேர்வு மார்ச் 23-ஆம் தேதி நடைபெற்றது. வேதியியல் தேர்வுக்கான ஏ வகை வினாத்தாள் வரிசையில் ஒரு மதிப்பெண் பகுதியில் 10-ஆவது கேள்வி, 22-ஆவது கேள்வி ஆகியவை பிழையுடன் இருந்தன.
இதில் 10-ஆவது கேள்வி யுரேனியம் அணுத்துகள் ஈயத்துடன் வேதியியல் வினை புரியும்போது வெளியிடப்படும் ஆல்பா, பீட்டா கதிர்களின் எண்ணிக்கை தொடர்பாகக் கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்வியில் ஈயத்தின் மதிப்பு 206 என்பதற்குப் பதிலாக, 208 என்று வழங்கப்பட்டிருந்தது.
இதனால், இந்தக் கேள்விக்கு சரியான விடை கிடைக்காது என ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.
அதேபோல், வெப்ப இயக்கவியல் தொடர்பான 22-ஆவது கேள்வியில் கொடுக்கப்பட்டிருந்த 4 விடைகளுமே தவறானவை. இந்தப் பகுதியில் விடையாக 0.032 என்று கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில், வேதியியல் தேர்வு விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முக்கிய விடைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இறுதி செய்தது.
இதில் வேதியியல் பாடத்தில் 10-ஆவது, 22-ஆவது கேள்விக்கு விடை எழுத முற்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் தலா 2 மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொருளாதாரத்துக்கு கருணை மதிப்பெண்? அதேபோல், பொருளாதாரப் பாடத்தில் 20 மதிப்பெண் வினா பகுதியில் 78-ஆவது கேள்வியில் தேவை நிகழ்ச்சியின் வகைகள், முக்கியத்துவத்தை விவரி என்று கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்வி பாடப்புத்தகத்தில் இடம்பெறவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பொருளாதாரப் பாடத்துக்கான கேள்வித்தாள் கடினமாக இருந்ததால் இந்தப் பாடத்துக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியது: பொருளாதாரப் பாடத்தில் கேட்கப்பட்டிருந்த 20 மதிப்பெண் கேள்வியானது பாடப்புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளது. பாடத்துக்குப் பின்புறத்தில் உள்ள வினாவுக்குப் பதில் புத்தகத்தில் உள்ளேயிருந்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை.
எனவே, இதற்குக் கருணை மதிப்பெண் வழங்க வேண்டிய அவசியம் எழவில்லை. எனினும், மாணவர்கள் எவ்வாறு இந்தத் தேர்வை எழுதியுள்ளார்கள் என்பதைப் பொருத்து கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக