லேபிள்கள்

3.4.15

ஓய்வூதியம் பெறுவதை எளிதாக்க புதிய தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும்; தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியம் பெறுவதை மேலும் எளிதாக்க புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓய்வூதியதாரர்கள்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், குடும்பத்தினர் ‘‘பென்சன் பைலட் ஸ்கீம்’ என்ற திட்டத்தின் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வாழ்வுச் சான்றிதழ், வேறு வேலைக்கு சேர்ந்த சான்றிதழ், வேறு வேலையில் சேராமல் இருப்பதற்கான சான்று, மறு திருமணம்அல்லது திருமணம் ஆகாததற்கான சான்றிதழ் போன்றவை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் அளிக்கும் வங்கி அதிகாரிகள் முன்பு ஓய்வூதியதாரர் நேரிலும் ஆஜராகலாம்.நோய் உட்பட தவிர்க்க முடியாத காரணங்களால் வாழ்வுச் சான்றிதழை பெறமுடியாமல் போய்விட்டால், அவர்களை வீட்டிலோ அல்லது ஆஸ்பத்திரியிலோ அந்த வங்கி அலுவலர் நேரில் சென்று சந்தித்துவிட்டு வாழ்வுச் சான்றிதழை அளிக்கலாம்.

புதிய மாற்றங்கள்

இந்த ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது, ஓய்வூதியம் வழங்குவதை எளிமைப்படுத்துவது குறித்து அரசுக்கு கருவூலம் மற்றும் கணக்குகள் இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாவட்ட வாரியாக ஓய்வூதியம் வழங்கு அலுவலங்களிலும், ஓய்வூதியம் அளிப்பதை கண்டறிவதற்கான மென்பொருள் மற்றும் தகவல்மையம் இணைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.மேலும், அவர்கள் டிஜிட்டல் முறையில் வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிப்பது, ஓய்வூதியத்தை தாமதமில்லாமல் வழங்குவது போன்றவற்றுக்காக ஓய்வூதியதாரரின் ஆதார் எண் இணைப்பு போன்ற சில உயிரி தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்கள்

அதன்படி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அனைவரும் இம்மாதம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய வாழ்வுச் சான்றிதழ் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட முறையில் கூடுதல் தகவல்கள், தேவையான சான்றிதழ்கள் போன்றவற்றை ஓய்வூதியம் வழங்கு அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அவை அரசு அதிகாரியால் சான்றொப்பம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஜூலை மாதம் நேரிலும் ஆஜராகலாம்.மேலும், பொதுத்துறை வங்கிகள் திட்டம் என்ற பி.எஸ்.பி. திட்டத்தின்படி ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தேவையான சான்றிதழ்களை நவம்பர் மாதம் ஓய்வூதியம் வழங்கும் வங்கிப் பிரிவில் வழங்க வேண்டும். இந்த கூடுதல் தகவல்களை ஓய்வூதியம் வழங்கு அலுவலகத்துக்கு வங்கி அதிகாரிகள் அனுப்பவேண்டும்.

என்னென்ன தகவல்கள்?

இது ஒருமுறை செய்யப்பட வேண்டிய அம்சங்களாக உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள்கிடைக்காத விவரங்களை, அவை கிடைத்த பிறகு சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் கூடுதல் தகவல்களை கொடுப்பது பற்றிய தகவல்களை பத்திரிகை செய்தியாக கருவூலம் மற்றும் கணக்குகள் இயக்குனர் வெளியிட வேண்டும்.கூடுதல் தகவல்கள் பற்றிய விவரங்கள் புதிதாக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் ஆகியவை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், வங்கிகளின் அறிவிப்புப் பலகையில் பார்வைக்கு வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக