லேபிள்கள்

26.4.15

கட்டாய கல்வி சட்டத்தில் பெரும் குளறுபடி: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மோசம்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அவர்களின் கல்விச் செலவுக்கான நிதி, மத்திய அரசின், 'சர்வ சிக் ஷா அபியான்' என்ற அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
* தனியார் சிறுபான்மைப் பள்ளிகளைத் தவிர, பிற தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை வழங்க வேண்டும்.
* மாணவர் சேர்க்கை இட விவரங்களை, பள்ளி அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும். 
* மாணவர் சேர்க்கை எப்போது துவங்கும்; எப்போது முடியும்; விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய தேதி என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என, தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த அரசாணையை பின்பற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால், தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பத்துக்கு, நன்கொடை வசூலித்து மாணவர்களை சேர்க்கின்றன.

தனியார் பள்ளிகளில், கடந்த டிசம்பரில் விண்ணப்பம் வினியோகித்து, மார்ச்சுக்குள் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. இதில், தனியார் பள்ளிகளின், 25 சதவீத இடங்கள் பட்டியலை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் பெற்று, ஏப்ரல், 2ம் தேதி மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரத்தில் விசாரித்த போது, அதிர்ச்சி தகவல் கிடைத்தது. ஆண்டுதோறும் தனியார் பள்ளிகள் தாங்களே நன்கொடை அல்லது சிபாரிசு படி சேர்க்கும், மாணவ, மாணவியரை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்த்ததாக பட்டியல் தயார் செய்து விடுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் மாணவர்களிடமும் கட்டணம் வசூலித்து விட்டு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நிதியையும், அரசிடம் பெற்றுக் கொள்வதாகவும், இதற்கு கல்வித்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு பள்ளியும், ஆண்டுதோறும், ஏப்ரல் 2ம் தேதிக்குள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பம் வழங்க வேண்டும். மே 2ம் தேதி முதல், 9ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெற்று, 11ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் மாணவர் சேர்க்கை விவரங்களை வெளியிட வேண்டும். இத்துடன், 25 சதவீதத்துக்கு மேல் விண்ணப்பங்கள் வந்தால், அதை, மே, 14ம் தேதி காலை, 10:00 மணிக்கு பெற்றோர் மற்றும் கல்வி அதிகாரிகளின் முன்னிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். மே 14ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து, இறுதிப் பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட நடைமுறை முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. தனியார் பள்ளிகளில் டிசம்பர் முதல் மார்ச்சுக்குள் மாணவர் சேர்க்கை முடிந்து விடுகிறது. ஆனால், மே 2ம் தேதி தான் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பங்கள் வழங்க வேண்டும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இச்சட்டத்தை நம்பி மே மாதம் வரை காத்திருந்து, 'சீட்' கிடைக்காவிட்டால், மற்ற பள்ளிகளிலும் பிள்ளைகளை சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த முன்னுக்குப் பின் முரணான நடைமுறையை அரசு எப்போது மாற்றும் என்று, பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக