லேபிள்கள்

30.4.15

துண்டு சீட்டுகளில் கல்வி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு தேனி முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

தேனி மாவட்ட தனியார் பள்ளிகளில் துண்டுச் சீட்டில் கல்வி கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தனியார் பள்ளியில் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது வீதிக்கு வீதி தனியார் பள்ளிகள் பெருகிவிட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

உரிய ரசீது தருவதில்லை

உதாரணத்துக்கு 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் 3 பருவம் கொண்ட ஆண்டுக்கு ரூ.5,500 கட்டணம் வசூல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால் பல பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கையின் போது டியூஷன் பீஸ், உணவு கட்டணம், பள்ளி புதிய கட்டிட நிதி என ரூ.30 ஆயிரம் வரை வசூலித்து விடுகின்றனர். பின்னர் 2-ம், 3-ம் பருவத்தின்போது தனியாக ரூ.20 ஆயிரம்வரை வசூலிக்கின்றனர். இந்த கூடுதல் கட்டணங்களுக்கு உரிய ரசீது தராமல் துண்டுசீட்டில் எழுதித்தருவதாக பெற்றோர்கள் புகார்தெரிவித்துள்ளனர். மேலும் சில பள்ளிகளில் வேன், ஆட்டோ மூலம் தேனி புறநகர் முல்லை நகரில் இருந்து தேனி நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்ல மாதந்தோறும் வாகன கட்டணமாக ரூ.1000 என வசூல் செய்கின்றனர்.ஆனால் தனியார் வேன், ஆட்டோக்களில் ரூ.300 முதல் ரூ.450 வரை மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. வெளியிடங்களில் ஒரு குயர் நோட்டு ரூ.20-க்கு விற்கப்படுகிறது. ஆனால் பல பள்ளிகளில் ரூ.50-க்கு விற்கின்றனர்.இதே போல் சீருடை, காலணி என கூடுதலாக கட்டணம் வசூல் செய்கின்றனர். வெளியிடங்களில் நோட்டு, காலணி, சீருடை வாங்கி வந்தால் ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு சம்பந்தப்பட்ட பள்ளியில் மட்டும் வாங்க வேண்டும் என பெற்றோர்களை வற்புறுத்துகின்றனர். ஓவியம், நடனம், இசை, கராத்தே, நீச்சல் என தனித்தனி பயிற்சி வகுப்புகளுக்கு வெளியிடங்களில் மாதக் கட்டணமாக ரூ.250 வசூல் செய்தால் பல பள்ளிகளில் ரூ.500முதல் 750 வரை வசூலிக்கப்படுகிறது.

பெற்றோர் புகார்

பணி இடமாறுதல், வேறு இடத்திற்கு குடிபுகுதல் என சம்மந்தப்பட்ட பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் பெற பெற்றோர் செல்லும் போது அவர்களிடம் ரூ.500 முதல் ஆயிரம் வரை கேட்கின்றனர். பணம் இல்லையென்றால் ஏதாவது காரணங்களை சொல்லி தினமும் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் சமூக ஆர்வலர் ராமராஜ் கூறியது: அரசு கட்டணங்களைவிட கூடுதலாக பல பள்ளியில் வசூல் செய்கின்றனர். இதற்காக முறையாக ரசீது தருவதில்லை, கூடுதல் கட்டணம் என்று கூறினால் மற்ற பள்ளிகளைவிட தங்கள் பள்ளியில்தான் கட்டணம் குறைவு என்கின்றனர். 
கட்டணம் செலுத்த மறுத்தால் பள்ளியில் சீட் இல்லை வேறு பள்ளிக்கு செல்லுங்கள் எனகின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் கருதி பல பெற்றோர்கள் கடனை வாங்கியாவது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு கடனை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் என்றார்.இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் வாசுவிடம் கேட்ட போது, தனியார் பள்ளிகளில்அரசின் கட்டண விவரங்களை பார்க்கும் படியான இடத்தில் ஒட்டிவைக்க வேண்டும். துண்டு சீட்டில் வசூல் செய்தாலோ முறையான ரசீது இல்லாமல் கட்டணம் வசூல் செய்தாலோ அப்பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான சுற்றறிக்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக