புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் மாணவர்கள் மது அருந்த உதவி செய்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதை ரத்து செய்யக்கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
புதுக்கோட்டை முக்கன்னாமலைப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தவர் விராலிமலை ராஜகோபாலன். பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலருக்கு 500 ரூபாய் கொடுத்து மது அருந்த துாண்டியதாக புகார் வந்ததால் ராஜகோபாலனை 'சஸ்பெண்ட்' செய்து ஏப்.,9 ல் பள்ளிக் கல்வி இணை கமிஷனர் (பணியாளர் நலன்) உத்தரவிட்டார்.
ராஜகோபாலன், ''மாணவர்கள் பிரிவு உபசார விழா நடத்த கேக், காரம் வாங்க 500 ரூபாய் கேட்டனர். பணத்தை பின் திருப்பித் தருவதாக கூறினர். அத்தொகையில் மாணவர்கள் மது அருந்தியது எனக்கு தெரியாது. 'சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,'' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு: சமூகத்தில் ஆசிரியர்களை கடவுளுக்கு சமமாக கருதுகின்றனர். மாணவர்களின் நல்லொழுக்கத்தை குரு உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்தான் மாணவர்களின் அறியாமை இருளை நீக்குபவர். ஆசிரியராக இருப்பவர் என்ன கற்பிக்கிறாரோ அதை அவரும் பின்பற்ற வேண்டும்.
மகாத்மா காந்தி, ''நற்குணங்கள் இல்லாத ஆசிரியர் உவர்ப்பு சுவை இல்லாத உப்பிற்கு சமம். மாணவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும். எல்லா அறிவையும் வழங்கிவிட்டு உண்மை, துாய்மை போன்ற நற்பண்புகளை விதைக்காவிடில் அதுவே மாணவர்களுக்கு இழைக்கும் துரோகம்,'' என்றார்.
மாணவர்கள் மது அருந்த மனுதாரர் உதவி செய்தாரா? இல்லையா? என முழு விசாரணைக்குப் பின் தெரிய வரும். 'சஸ்பெண்ட்' உத்தரவில்
தலையிட முடியாது. விசாரணையை கல்வித்துறை அதிகாரிகள் ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.
அரசு கூடுதல் வழக்கறிஞர் வி.முருகானந்தம் ஆஜரானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக