தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 95 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் என மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 20 பி.டி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல் கட்டக் கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 2,939 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2810 மாணவர்கள் சேர்க்கைக் கடிதம் பெற்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில்... சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலியிடங்கள் ஏதும் இல்லை. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு காலியிடம் உள்பட சில கல்லூரிகளில் சேர்த்து மொத்தம் 13 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில்... சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 502 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதையடுத்து சுயநிதி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 95 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 3 காலியிடங்கள், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் 16 காலியிடங்கள், மதுராந்தகம் அருகே கற்பகவிநாயகா மருத்துவக் கல்லூரியில் 16 காலியிடங்கள் உள்பட மொத்தம் 95 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
அரசு பி.டி.எஸ். இடங்கள்: சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அதில் உரிய
காலக்கெடுவுக்குள் 65 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதையடுத்து, 20 அரசு பி.டி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக