விருதுநகர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் சம்பள உயர்வு கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த பிரச்னை இழுபறியாக உள்ள நிலையில், தமிழக அரசுக்கு அடுத்த தலைவலி உருவாகியுள்ளது.
மத்திய அரசுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்க இயக்கங்களின் கூட்டு நடடிக்கை குழுவான 'ஜாக்டோ' அமைப்பு, அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டங்களையும், தொடர் போராட்டங்களையும் நடத்தப்போவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

தங்களது போராட்டத்திற்கு ஆதரவு கோரி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து இந்த அமைப்பினர் ஆதரவு திரட்டி வருவது அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னையில் 'ஜாக்டோ' அமைப்பின் உயர் மட்டக்குழு கூட்டம் அதன் தலைவர் தாஸ் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகம், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் உள்பட 15 ஆசிரியர் சங்க நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிறகு 'ஜாக்டோ' அமைப்பின் தலைவர் தாஸ் இது பற்றி கூறுகையில், "மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ அல்லது பள்ளிக்கல்வி செயலாளரோ எங்களை சந்திக்க மறுக்கின்றனர். எனவே ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னையில் தொடர் முழக்க போராட்டம் நடத்த உள்ளோம்.
பின்னர் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இது தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து எங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டி வருகிறோம்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக