லேபிள்கள்

6.7.15

கல்விதுறையில் வாரிசு வேலை கோரி 14 ஆண்டுகளாக காத்திருந்தவருக்கு, வேலை வழங்குமாறு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

வாரிசு வேலை கோரி 14 ஆண்டுகளாக காத்திருந்தவருக்கு, வேலை வழங்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 


‘‘எனது தந்தை மீமீசல் அரசு மேனிலைப்பள்ளியில் உதவியாளராக பணியாற்றினார். பணியில் இருந்த போது 19.9.98ல் இறந்தார். இதனால் கருணை அடிப்படையில் எனக்கு வாரிசு வேலை கேட்டு 2000ம் ஆண்டில் என் தாயார் விண்ணப்பித்தார். 

என்னுடைய மற்றொரு சகோதரருக்கு மெரிட் அடிப்படையில் 2012ல் இடைநிலை ஆசிரியர் பணி கிடைத்தது. இதை காரணம் காட்டி எனக்கு வாரிசு வேலை தர முடியாது என அறந்தாங்கி டிஇஓ மறுத்து 2013ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். அரசு தரப்பீல் ஆஜரான வக்கீல் முகமது மைதீன், குடும்பத்தில் ஒருவர் அரசுப் பணியில் இருந்தால் வாரிசு வேலை கிடையாது என அரசாணை உள்ளதாக தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘‘மனுதாரரின் தந்தை இறந்ததும் முறைப்படி உரிய காலத்தில் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 

எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த விண்ணப்பத்தை நிலுவையில் வைத்துள்ளனர். மற்றொருவருக்கு மெரிட் அடிப்படையில்தான் வேலை கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் வேலை வழங்க முடியாது என்பதை ஏற்க முடியாது. மனு செய்தவுடன் அதை பரிசீலித்திருந்தால் அப்போதே வேலை கிடைத்திருக்கும். உரிய காலத்தில் பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு தற்போது மறுப்பதை ஏற்க முடியாது. எனவே வேலை வழங்க மறுத்த டிஇஓ உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2 மாதத்திற்குள் மனுதாரருக்கு பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக