லேபிள்கள்

22.11.15

ஏழாவது ஊதியக்குழு : தமிழக அரசுக்கு ஏற்படப்போகும் கூடுதல் செலவு ரூ.1,500 கோடி

ஏழாவது ஊதியக்குழு அறிக்கை, மத்திய நிதி அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களிடமும், ஊதிய உயர்வு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த அறிக்கையை, தமிழகத்தில் அமல்படுத்தும் போது, ஆண்டுக்கு கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியில், 48 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்; 55 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். ஊழியர்களின் ஊதியம் மற்றும் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதிய விகிதம், 10 ஆண்டுகளுக்கு, ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். இதற்காக ஊதியக்குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில், ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்படும்.

பரிந்துரை:

அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி மாத்துார் தலைமையில், 2014ல், ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 23.55 சதவீதம்; ஓய்வூதியர்களுக்கு 24 சதவீத ஊதிய உயர்வு வழங்க, பரிந்துரை செய்துள்ளது. குழு அறிக்கை, மத்திய அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை அரசு ஏற்றுக் கொள்கிறதா அல்லது மறுஆய்வு செய்ய குழு அமைக்குமா என்பது, இனிமேல் தான் தெரியும்.

மத்திய அரசு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்றுக் கொண்டால், அதை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்ய, மாநில அரசுகள் தனி குழு அமைக்கும். அந்தக்குழு பரிந்துரை செய்யும், ஊதிய உயர்வை, மாநில அரசுகள் அமல்படுத்தும். பொதுவாக, மத்திய அரசு குழு அறிக்கையை தமிழக அரசு அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் வழக்கம். எனவே, தமிழக அரசு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு, தமிழக அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

போதாது:

இதுகுறித்து, தமிழக அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை செய்த ஊதிய உயர்வையே, தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை.ஆறாவது ஊதியக்குழு, அலுவலக உதவி யாளர்களுக்கு, அடிப்படை சம்பளமாக, 5,500 ரூபாய் நிர்ணயம் செய்தது. ஆனால், தமிழக அரசு, 4,800 ரூபாய் வழங்குகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ளபடி, அரசு ஊழியர்களுக்கு, 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தால், அரசுக்கு கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் வரை செலவாகும். அரசு ஊழியர் சம்பள உயர்வு மூலம், 965 கோடி ரூபாய்; ஓய்வூதியர்களுக்கான ஊதிய உயர்வு மூலம், 450 கோடி ரூபாய் செலவாகும். மத்திய அரசு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்றுக் கொண்டால், அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.அதன் பிறகே மாநில அரசு, ஊதிய உயர்வு குறித்து ஆலோசிக்கும். ஆனால், தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ளதால், புதிதாக வரும் அரசே, ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்கும்.

நம்பிக்கை:

ஏனெனில், நடப்பாண்டு பற்றாக்குறை பட்ஜெட் போடப்பட்டுள்ளது. சம்பள உயர்வு வழங்க, கூடுதல் நிதி தேவைப்படுவதால், அதற்கேற்ப வருமானத்தை அதிகரிக்க வேண்டும். எனவே, புதிதாக ஆட்சிக்கு வரும் அந்த கட்சி, எவ்வளவு ஊதிய உயர்வுக்கு சம்மதிக்கும் என்பதை பொறுத்தே, ஊழியர்களின் ஊதிய உயர்வு அமையும். எனினும், சம்பள உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை, ஊதியக்குழு பரிந்துரை ஏற்படுத்தி உள்ளது. எப்படிஇருப்பினும், வரும் ஜனவரி முதல் புதிய ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு கடைசியில் அரசு முடிவு எடுத்தாலும், அரசு ஊழியர்களுக்கு, முன் தேதியிட்டு ஊதிய உயர்வும், நிலுவை தொகையும் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக