கல்வி ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசி, வெளிநடப்பு செய்த, 22 தலைமை ஆசிரியர்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் நடந்தது; 100 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு, தமிழக அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட மாநில ஒருங்கிணைப்பாளராக, பூஜா குல்கர்னி தலைமை வகித்தார். அப்போது, 'எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை; ஆசிரியர்களின் பணி போதுமானதாக இல்லை' என, உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சில தலைமை ஆசிரியர்களை எழுந்து நிற்க சொன்ன, திட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னி எச்சரிக்கை விடுத்தார். இதை எதிர்த்து, வாக்குவாதம் செய்த தலைமை ஆசிரியர்கள், வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசிய தலைமை ஆசிரியர்கள், 22 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, அவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 'சஸ்பெண்ட்?' 'சர்ச்சையில் சிக்கி உள்ள தலைமை ஆசிரியர்கள், நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்; அதில் திருப்தி இல்லையென்றால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, உயர்மட்ட குழு விசாரணை நடத்தப்படும். அதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக