லேபிள்கள்

26.11.15

பாடத்தை கவனிக்காமல் மொபைல்போனில் விளையாட்டு: ஆசிரியர் சோதனையில் சிக்கினர் பள்ளி மாணவியர்

கோவை,: கோவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது,
மொபைல்போனில் விளையாடிக்கொண்டிருந்த மாணவியர் ஐந்து பேர், கையும் களவுமாக சிக்கினர்.

கோவை ராம் நகர், ரங்கநாதபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2, 'சி' பிரிவில், நேற்று முன்தினம், வணிகவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, மாணவி ஒருவர், மொபைல்போனில் பேசியுள்ளார்; வேறு சில மாணவியரும், மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருந்தனர்.அதிர்ச்சியடைந்த ஆசிரியர், தலைமையாசிரியர் நிர்மலா தேவி முன்னிலையில் சோதனை நடத்தினார். இதில், மாணவியர் ஐந்து பேரிடம் இருந்து மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று காலை பள்ளிக்கு வந்த பெற்றோர், ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெற்றோர் கூறுகையில், 'குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்காக மொபைல்போன் கொடுத்துள்ளோம். மாணவியரை ஸ்டீஸ் ஸ்கேலால் அடித்து, மொபைல்போனை பறிமுதல் செய்துள்ளனர்' என்றனர்.

ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வரக்கூடாது என, பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளோம். அதையும் மீறி மொபைல்போன் கொண்டு வந்ததுடன், வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது, போனில் பேசியுள்ளனர்; விளையாடியுள்ளனர். இதனால், பாடம் நடத்துவதும், மற்ற மாணவிகள் கல்வி கற்பதும் பாதித்தது' என்றனர்.

மாநகராட்சி கல்வி அலுவலர் ரவி, 54வது வார்டு கவுன்சிலர் சீதாராமன் முன்னிலையில், மாணவியருக்கும், பெற்றோருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. இதையடுத்து, மாணவியர், செய்த தவறை ஒப்புக்கொண்டனர். பெற்றோரும் சமாதானம் அடைந்தனர். மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, மொபைல்போன்களை பெற்றுச்செல்லுமாறு, மாநகராட்சி கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்.

மாநகராட்சி கல்வி அலுவலர் கூறுகையில், ''பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வர அனுமதியில்லை. மாணவர்களுக்கு மொபைல்போன் வாங்கிக்கொடுப்பதால் கல்வி பாதிக்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும். மொபைல் போன் தடையை கடுமையாக கடை
பிடிக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெற்றோர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக