லேபிள்கள்

13.8.16

கல்வி தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவில்லை: மத்திய அரசு விளக்கம்

புதிய கல்வி கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


மாநிலங்களவையில் இதுதொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை கல்வியில் திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்களவையில், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமையும் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் விளக்கம் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இட ஒதுக்கீடு அல்லது சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான எந்த அரசமைப்புச் சட்ட விதிகளையும் திருத்தம் செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபடவில்லை. ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறோம்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு குறித்து கருத்துகள் அல்லது ஆலோசனைகளை தெரிவிக்கும்படி மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அனைத்து தரப்பினரிடம் இருந்தும் ஆலோசனைகளை அரசு கேட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் பிரகாஷ் ஜாவ்டேகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக