லேபிள்கள்

10.8.16

லீவு' எடுக்காத ஆசிரியர், மாணவருக்கு நற்சான்று : பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: ''அரசுப் பள்ளிகளில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, இனி ஆண்டு தோறும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.

சட்டசபையில் அவர், நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:

பத்தாம் வகுப்பு படிக்கும், 12 லட்சம் மாணவர்கள் பயன் அடையும் வகையில், பாடநுால்களில் உள்ள அச்சுப் பகுதிகளுடன் படங்கள், குரலொலி மற்றும் காணொலிகளை உட்புகுத்தி, 'மல்டி மீடியா' அனுபவம் தரும் வகையில், 'இ - பப்ளிகேஷன்' பாடநுால்களாக மாற்றப்படும்.

நடப்பு கல்வியாண்டில், 1.32 லட்சம் மாற்றுத்திறனாளி உபகரணங்கள், 32.18 கோடி ரூபாயில் வாங்கப்படும். தொலைதுார மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் குழந்தைகள், பள்ளி செல்வதற்கான போக்குவரத்து வசதி மற்றும் வழிக்காவலர் வசதி, 12.58 கோடி ரூபாயில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 21 கோடி ரூபாய் செலவில், சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். எட்டு, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்; 29 மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள், 3.7 கோடி ரூபாயில் புனரமைக்கப்படும்.
தமிழ்நாடு பாடநுால் நிறுவனம் வெளியிட்டுள்ள, 1,000 நுால்கள், 5 கோடி ரூபாய் செலவில் மின்மயமாக்கி, இணையதளத்தில் பதிவேற்றப்படும். 32 மாவட்டங்களில் உள்ள மைய நுாலகங்களில், சூரிய ஒளி மின் வசதி, 64 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். மூன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, ஆங்கில இலக்கண பயிற்சித்தாள்கள் வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக