லேபிள்கள்

8.8.16

மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்சஓய்வூதியம் ரூ.9,000

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசுப் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாத ஓய்வூதியம் ரூ.3,500-லிருந்து குறைந்தபட்சம் ரூ.9,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 157 சதவீதம் அதிகமாகும்.

இதேபோல், மத்திய அரசுப் பணியாளர்கள், தங்கள் பதவியிலிருந்து ஓய்வு பெறும்போது அளிக்கப்படும்பணிக்கொடையும் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


இவை அனைத்தும் நிகழாண்டு ஜனவரி 1 அல்லது அந்த தேதிக்குப் பிறகு, பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும், பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.இதுகுறித்து மத்தியப் பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம் துறை அமைச்சகம், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசில் பணிபுரிந்து நிகழாண்டு முதல் ஓய்வுபெற்றவர்களுக்காக அளிக்கப்பட்ட 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன.

அதன்படி, இதுவரை குறைந்தபட்சமாக மாதம் ரூ.3,500 ஓய்வூதியமாக பெற்றுவந்த மத்திய அரசின் முன்னாள் பணியாளர்கள், தற்போது, ரூ.9,000 வரை பெறுவார்கள்.அதிகபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.1,25,000 ஆகும். இது கடந்த முறை இருந்ததைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம்.அதேபோல், பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, விபத்து நேர்ந்து இறக்கும்பட்சத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.நிகழாண்டு ஜனவரி 1 அல்லது அந்த தேதிக்குப் பிறகு,இனி அதுபோன்று உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும்.ஒருவேளை பயங்கரவாதிகளுடன் சண்டையிடும்போது பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழக்க நேரிட்டாலோ அல்லது இயற்கைப் பேரிடர்களில் சிக்கி உயிரிழக்க நேரிட்டாலோ அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 35 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும். இதுபோன்று உயிரிழப்பவர்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.

இதுதவிர, தினமும் தவறாமல் அலுவலகம் வருபவர்களுக்கு மாதந்தோறும் அளிக்கப்பட்டுவரும்அகவிலைப்படியையும், மருத்துவ அகவிலைப்படியையும் உயர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை முன்பு வழங்கப்பட்ட அகவிலைப்படியே தொடரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.58 லட்சம் பேர் மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக