லேபிள்கள்

3.2.17

'டெட்' தேர்ச்சி பெறாதவர்களை பள்ளிகளில் நியமிக்க தடை

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு முடிக்காதவர்களை, தனியார் பள்ளிகளில் நியமனம் செய்ய, தமிழக பள்ளி கல்வித்துறை தடை
விதித்துள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில், அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர் பணி நியமனத்துக்கு, 2011 முதல், 'டெட்' தேர்வு கட்டாயமானது. 

ஆனால், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், 'டெட்' தேர்வு முடிக்காதவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவர்களில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 'டெட்' தேர்வில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். மற்ற பள்ளிகளில், 'டெட்' தேர்வு முடிக்காதோருக்கு, சம்பளம் நிறுத்தப்பட்டு உள்ளது.


 'இனி டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பிறப்பித்துள்ள உத்தரவு:தமிழக அரசு உத்தரவுப்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளில், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' கட்டாயம். 2012, 2013ல், 'டெட்' தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனாலும், பல பள்ளிகளில், 'டெட்' தேர்ச்சி பெறாதவர்களை, ஆசிரியர் பணிக்கு சேர்த்துள்ளனர்.
இது குறித்த ஆய்வில், 159 பேர், 'டெட்' தேர்ச்சி இன்றி, பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களில், 113 பேர் வழக்கு மூலம் சம்பளம் பெறுகின்றனர். மீதம், 43 பேருக்கு இதுவரை சம்பளம் தரவில்லை. அவர்களுக்கு, அரசின் மானியம் பெற்று, சம்பளம் வழங்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.


எதிர்காலத்தில், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, தனியார் பள்ளிகள், 'டெட்' தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. அரசு அனுமதி பெற்றே, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக