லேபிள்கள்

30.4.17

அங்கீகாரமின்றி 2,500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மாணவர்களை ஏமாற்றி வசூல் வேட்டை

தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாமலேயே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்றதாக கூறி, ௨,௫௦௦ பள்ளிகள் செயல்படுவது தெரியவந்துள்ளது.
மாணவர்களையும், பெற்றோரையும் ஏமாற்றி வசூல் வேட்டை நடத்தும் இந்த பள்ளிகளுக்கு, அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், 12 ஆயிரம் தனியார் மெட்ரிக், நர்சரி பள்ளிகள் செயல்படுகின்றன. இருப்பினும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, பெற்றோர் அலைமோதுகின்றனர். ஆனால், தமிழகத்தில், 660 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் உள்ளது. அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் விபரம், சி.பி.எஸ்.இ.,யின், 
www.cbseaff.nic.in என்ற இணையதளத்தில் 
உள்ளது.


அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ., அங்கீகாரமின்றி, பல பள்ளிகள் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன், சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்றுள்ளதாகக் கூறி, இந்தப் பள்ளிகள் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.


இது குறித்து, மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் சிலர் கூறியதாவது:
அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு, அரசின் விதிமுறைகள், நகர அமைப்பு என்ற, டி.டி.சி.பி., சான்றிதழ், சுகாதாரத் துறை மற்றும் தீயணைப்பு துறையின் சான்றிதழ்கள் தேவை. இதற்கு, பல லட்சம் ரூபாய் செலவாகும்.


மேலும், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, எல்.கே.ஜி.,யில், 25 சதவீத இடங்களில், இலவசமாக மாணவர்களை சேர்க்க வேண்டும். இதற்கான பணமும், அரசிடமிருந்து எளிதில் கிடைப்பதில்லை.


ஆனால், தமிழகத்தில், 2,500க்கும் மேற்பட்ட பள்ளிகள், மெட்ரிக் அங்கீகாரமும் பெறாமல், நர்சரி பள்ளி அங்கீகாரமும் பெறாமல், மாணவர்களை சேர்த்து, வசூல் வேட்டை நடத்துகின்றன. அந்தப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., இணைப்பு அல்லது இந்திய 
இடைநிலை சான்றிதழ் கவுன்சிலான, ஐ.சி.எஸ்.இ., இணைப்பு பெற்றதாக காட்டிக் கொள்கின்றன.


அங்கீகாரம் இல்லாததால், இந்தப் பள்ளிகளுக்கு, கட்டண கமிட்டியின் கல்வி கட்டண நிர்ணயம், கட்டாயக் கல்வி உரிமை சட்ட இலவச மாணவர் சேர்க்கை, அரசுத் துறைகளின் சான்றிதழ்கள் எதுவும் கிடையாது. மாநில கல்வித் துறை, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் என, யாரும் ஆய்வு செய்வதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது போன்ற பள்ளிகளில் படிப்போர், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரும் போது, அங்கீகாரமின்றி பாதிக்கப்பட்டு, மெட்ரிக் பள்ளிகளுக்கு திரும்பும் சூழல் ஏற்படுகிறது.


'தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், சி.பி.எஸ்.இ., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்றதாக, பெற்றோர் மற்றும் மாணவர்களை நம்ப வைத்து முறைகேடு செய்யும், இது போன்ற பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக