அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ஆன் லைன்' பதிவில், விளையாட்டு பிரிவு விதிகளுக்கான பதிவில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை மூலம், ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது.அண்ணா பல்கலையின், https:/www.tnea.ac.in இணையதளத்தில், மாணவர்களின் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பெயர், தந்தை, காப்பாளர் பெயர், தொடர்பு முகவரி, வருமானம், தொழில், ஜாதி, மதம், உதவித்தொகை தேவையா, அகில இந்திய தொழிற்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின், உதவித்தொகை வேண்டுமா போன்ற, தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.'இ - மெயில்' முகவரி மற்றும் மொபைல்போன் எண், ஆன்லைன் பதிவுக்கு கட்டாயம்.
கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்யும், இணையதளத்தில் ஜாதி, மதம், விளையாட்டு மற்றும் சிறப்பு பிரிவுக்கு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. அதில், ஒவ்வொரு சலுகைக்குமான விதிகள் அடங்கிய, 'லிங்க்' தரப்பட்டுள்ளது. இதில், 15வதில் விளையாட்டு பிரிவுக்கான விதிகளை தெரிந்து கொள்வதில், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, விரிவான விபரங்கள் கூறப்படவில்லை.
அதில், ஜாதி வாரியாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு விதிகள் உள்ளன. அதே நேரம், முன்னாள் ராணுவ வீரர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு சலுகைக்கு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில், விதிகளை பார்வைக்கு இணைக்கவில்லை. அதனால், விதிகளை கண்டுபிடிக்க, மாணவர்கள் திணறுகின்றனர்.
இந்த குளறுபடியை, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதி எடுப்பதில் குழப்பம் :
இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்ததும், பணம் செலுத்த வேண்டும். பின், பதியப்பட்ட ஆவணத்தை சேமிப்பதற்கான, 'சேவ் ஆப்ஷனும், பிரிவீயூ பார்க்கும் ஆப்ஷனும்' தரப்பட்டுள்ளன. பல மாணவர்கள், பிரிவியூ பார்த்து, பிரின்ட் என, அச்சுப்பிரதி எடுக்கும், ஆப்ஷனை தேர்வு செய்கின்றனர். அச்சுப்பிரதி எடுத்த பின், விண்ணப்பத்தில் பிழைகள் இருந்தால், அதை, இணையதளத்தில், மாற்ற முடிவதில்லை. எனவே, அச்சுப்பிரதி எடுக்கும் ஆப்ஷனில் உள்ள, கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என, மாணவர்கள் கோரியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக