லேபிள்கள்

20.5.17

மாணவர்கள் இல்லாத மலைக்கிராம அரசுப் பள்ளிகளை மூட உத்தரவு

தேனி மாவட்டம், போடி அருகே மாணவர்களே இல்லாத ௫ மலைக்கிராம அரசு தொடக்கப் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

போடி ஒன்றியத்திற்கு உள்பட்ட குரங்கணி, கொட்டகுடி, ஊரடி, ஊத்துக்காடு, அகமலை, கொழுக்குமலை, முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன. 


இங்கு செல்ல ரோடு, பஸ் வசதிகள் குறைவு. இதை காரணம் காட்டி ஆசிரியர்கள் தாமதமாக வருகின்றனர். இதனால் இங்கு ௫ம் வகுப்பு முடித்தும், சில மாணவர்கள் தமிழ் பாடத்தை வாசிக்க தெரியாமல் உள்ளனர்.


மலைக்கிராமங்களில் பெற்றோர் பலர் கல்வி பயிலாத நிலையில், போதிய விழிப்புணர்வு இன்றி தங்களின் குழந்தைகளை தோட்ட வேலைக்கு அனுப்பி விடுகின்றனர். 


சிலர் போடியில், விடுதியுடன் கூடிய அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். இதனால் ஊரடி, ஊத்துக்காடு, சொக்கன்அலை, கொழுக்குமலை, முதுவாக்குடி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தற்போது மாணவர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனால் அந்த அரசுப் பள்ளிகளை மூட, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அங்கு பணியாற்றிய தலைமையாசிரியர், ஆசிரியர்கள் போடி ஒன்றியத்தின் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக