உ.பி.,யில், பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஒவ்வொரு சனிக்கிழமையும்,
பாட புத்தகங்கள் இல்லாத வேலை நாளாக அறிவிக்க, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகவுள்ளது.
தொடரும் மாற்றங்கள்
உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், பா.ஜ., தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், துணை முதல்வர் தினேஷ் சர்மா தலைமையில், மாநில கல்வித்துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில், அரசின் பல்வேறு திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
அது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, மாநில அரசு அக்கறையுடன் செயல்படுகிறது. சனிக்கிழமைஅதே சமயம், அவர்களின் நினைவாற்றல், கற்பனைத் திறன், தலைமைப் பண்பு, மற்றவர்களுடன் பழகும் முறை, மாணவர் - ஆசிரியரிடையிலான உறவு முறை ஆகியவற்றை வளர்க்கும் வகையில், வாரம் ஒரு நாள், பாட புத்தகம் இல்லாத வேலை நாளாக அறிவிக்க அரசு திட்டமிடப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகளில் பாட புத்தகம் இல்லாத வேலை நாளாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில், மாணவர்கள், பள்ளிக்கு பாட புத்தகங்கள் எடுத்து வர தேவையில்லை. அன்றைய வேலை நாளில், கலந்துரையாடல் மூலம் மட்டுமே பாடம் கற்பிக்கப்படும். இதன் மூலம், மாணவர்களின் கேள்வித் திறன் அதிகரிக்கும். அவர்களுக்குள் எழும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் மொத்தமுள்ள, 75 மாவட்டங்களில், 1.64 லட்சம் அரசுப் பள்ளி கள் செயல்படுகின்றன; அவற்றில், 1.78 கோடி மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக