லேபிள்கள்

1.6.17

தனியார் ஆசிரியர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம்

ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில், அருகிலுள்ள தனியார்
பள்ளி ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த வேண்டும்' என, அரசுக்கு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு யோசனை தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர், இளங்கோவன், பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 


அதில், அவர் கூறியுள்ளதாவது: பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் வரும் நிலையில், இந்த ஆண்டு, புதிய அம்சங்களை மட்டும், கூடுதல் இணைப்பாக, பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். எழுத்துத்தேர்வு முடிந்த பின்னரே, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். செய்முறைத் தேர்வு, வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், முறையாக நடத்த வேண்டும். பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் மூலம், பள்ளி ஆசிரியர்களுக்கு, பணியிடை பயிற்சி தர வேண்டும். 

வெயில், மழைக்காக அடிக்கடி விடுப்பு அறிவிப்பதால், வேலை நாட்களை சரிகட்ட, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனைத்து சனிக்கிழமைகளையும் வேலை நாளாக அறிவிக்க வேண்டும். மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு, பள்ளி நாட்களிலும், விடுமுறையிலும், கூடுதல் பயிற்சி தர வேண்டும்.

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணியிடம் காலியாக இருந்தால், அங்குள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்தப்படாமல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, அருகிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களை வரவழைத்து, பாடம் நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக