லேபிள்கள்

10.7.17

ஆசிரியர்-மாணவர்கள் நிர்ணயம் : தொடக்க கல்வியில் வருமா மாற்றம்

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர்கள் நிர்ணயம், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் உள்ளது போல் மாற்றியமைக்க வேண்டும்
என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டம் 11.8.2010ன் படி அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் 1:30 என்ற விகிதத்திலும், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 1:35 விகித்திலும் ஆசிரியர் மாணவர்கள் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.இதன் அடிப்படையில், 150 மாணவர்கள் வரையுள்ள பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். 

ஆனால் 150க்கு மேல் மாணவர் எண்ணிக்கை இருக்கும்பட்சத்தில் ஆசிரியர் மாணவர் நிர்ணயத்தில் குழப்பம் நீடிப்பதாக உள்ளது. அதாவது 150 - 200 மாணவருக்கு 6 ஆசிரியர், 201-240க்கு 7 ஆசிரியர், 241- 280க்கு 8 ஆசிரியர் என நிர்ணயம் விதி உள்ளது. இதன்படி தொடக்கப் பள்ளிகளில் 150க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை இருக்கும் பட்சத்தில் 1:35 என்ற அடிப்படையில் தான் ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுகிறது.ஆனால் அதேநேரம் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் இருந்தாலும் 1:35 என்ற அடிப்படையில் தான் ஆசிரியர் மாணவர் நிர்ணயம் உள்ளது. தொடக்க கல்வியில் உள்ள இந்த முரண்பாட்டால் அதிக எண்ணிக்கையில் மாணவர் உள்ள பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ள நிலை தமிழகம் முழுவதும் உள்ளது.

இதுகுறித்து தொடக்க கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:இப்பிரச்னைக்கு தீர்வுகாண 
ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தொடக்க கல்வியில் தான் செயல்வழி கற்றல் முறை உள்ளது. இதனால் ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் 150 மாணவர்களுக்கு அதிகம் உள்ள பள்ளிகளில்  ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது பணிச்சுமை ஏற்படுகிறது. கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்பட்டு மாணவர் மீது தனிக்கவனமும் செலுத்த முடியவில்லை.


எனவே நடுநிலை, உயர்நிலையில் உள்ளதுபோல் தொடக்க கல்வியிலும் எத்தனை மாணவர்கள் இருந்தாலும் 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியர் மாணவர் நிர்ணயம் இருக்கும்படி மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் 'உபரி' ஆசிரியர்கள் பிரச்னைக்கும் முடிவு ஏற்படும்.
கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் செயலாளர் உதயச்சந்திரன் இப்பிரச்னையிலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக