லேபிள்கள்

11.7.17

மத்திய அரசு ஊழியர்களின் சிறப்பு படி ரத்தாகிறது

புதுடில்லி: மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற சிறப்பு படிகளை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. படிகள் தொடர்பான மத்திய குழு அளித்த
பரிந்துரைகளை ஏற்று, இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையில், அவர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு படிகள் குறித்தும் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. இதில், படிகள் தொடர்பான மத்திய குழு அளித்த பரிந்துரைகளில் சில ஏற்கப்பட்டுள்ளன; சில நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கேபினட் செயலர் மற்றும் அதற்கு இணையான அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும், 10 ஆயிரம் ரூபாய் கேளிக்கை படியை நிறுத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அரசு ஊழியர்களுக்கு தற்போது சிறப்பு படி வழங்கப்படுகிறது; இதை ரத்து செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பிட்ட துறை ஊழியர்களுக்கு மட்டும், முடி திருத்தம் செய்வதற்கான படி நீட்டிக்கப்படும். அதே போல், அரசின் முக்கிய ரகசிய ஆவணங்களை கையாளும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு படி, இனி வழங்கப்படாது. ரயில்வே மற்றும் தபால் ஊழியர்களுக்கு, மாதம், 90 ரூபாய் சைக்கிள் படி வழங்கப்படுகிறது. இதை நிறுத்த பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. அந்த படி, இனி, மாதம், 180 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது போல், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், 196 படிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் சில நீக்கப்பட்டுள்ளன; சில படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக