ஆங்கிலோ இந்தியன் மற்றும் மெட்ரிக் பாடத்திட்டங்களே இல்லாத நிலையில், பள்ளி மாறும் மாணவர்களிடம், பாடத்திட்ட மாறுதல் கடிதம் வாங்கி வரும்படி, பள்ளிக் கல்வித்துறை கட்டாயப்படுத்துவதால்,
மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். தமிழகத்தில், 2011க்கு முன், மாநில பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என, பல பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட்டன. ௨௦௧௧ முதல், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதனால், மெட்ரிக் மாணவர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கும், அரசு பள்ளி மாணவர்கள், மெட்ரிக் பள்ளிகளுக்கும் மாறுவதில் எந்த சிக்கலும் இல்லை. சமச்சீர் கல்விக்கு முன், இது போன்று, வேறு நிர்வாக பள்ளிகளுக்கு மாற முடியாது.
மாறவில்லை : சமச்சீர் கல்வி அறிமுகமாகி, ஆறு கல்வி ஆண்டுகள் முடியும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை நிர்வாக குளறுபடி மட்டும் இன்னும் மாறவில்லை. ஆங்கிலோ இந்தியன் பள்ளி, மெட்ரிக் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளுக்குள் மாணவர்கள் மாறினால், மாவட்ட கல்வி அதிகாரி அல்லது முதன்மை கல்வி அதிகாரியிடம் இருந்து, பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக கடிதம் வாங்கி வரும்படி கூறுகின்றனர்.அதனால், மாணவர்களும், பெற்றோரும், கல்வி அதிகாரிகளின் அலுவலகங்களில், சிபாரிசு கடிதம் வாங்குவது போல, காத்துக் கிடக்கும் நிலை உள்ளது.
இது குறித்து, பெற்றோர் கூறியதாவது:பல பாடத்திட்டங்கள் இருந்த போது, இது போன்று பாடத்திட்ட மாற்றம் குறித்து கடிதம் வாங்கும் நிலை இருந்தது. தற்போது, ஒரு பாடத்திட்டமே அமலில் உள்ளது. ஆனால், இல்லாத பாடத்திட்டத்துக்கு, தனித்தனி துறைகள் வைத்து, அவர்களின் நிர்வாக பணிகளுக்கு, மாணவர்களை அலைய வைக்கின்றனர்.
சரியானதல்ல : நிர்வாக வசதிக்காக, இந்த கடிதம் தேவைப்பட்டால், அதை பள்ளிகள் மூலம், அவர்களே ஆன்லைன் அல்லது தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.மாறாக பள்ளி வகுப்பை விட்டு விட்டு, மாணவர்களையும், அவர்களுக்கு துணையாக பெற்றோரையும் அலைய வைப்பது சரியானது அல்ல.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக