லேபிள்கள்

24.9.17

சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துதேர்வு 36 ஆயிரம் பேர் பங்கேற்பு

தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வை 36 ஆயிரம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இசை, தையல் மற்றும் உடற்பயிற்சி ஆகிய
சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் 1,325 காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டி எழுத்து தேர்வு நடத்த அரசு முடிவு செய்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு இணையதளத்தில் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 106 மையங்களில் நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது.

தேர்வு மையங்கள் 3 மாவட்டங்களுக்கு ஒரு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையை பொறுத்தவரை கோடம்பாக்கம் பதிப்பக செம்மல் கணபதி மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

36 ஆயிரம் பேர்

தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரத்து 951 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர். ஆனால் 35 ஆயிரத்து 780 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதிய சிலர் கூறுகையில், ‘கேள்விகள் அனைத்தும் அறிவியல் ரீதியாக கேட்கப்பட்டு இருந்தன. கேள்விகள் கடினமாகவும் இல்லை. எளிதாகவும் இல்லை’ என்றனர். ஓவிய ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வு எழுதிய சிலர், கேள்விகள் பல கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.

தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘பாலிடெக்னிக் ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வு முடிவு வெளிவந்தபின்னர், சிறப்பு ஆசிரியர் எழுத்து தேர்வு முடிவு வெளிவரும். விரைவில் இணையதளத்தில் வினா-விடை வெளியிடப்படும்’ என்று தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக