அரசு பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த மாதம் முதல், நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசு சார்பில், 'ஜே.இ.இ., நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வுகளில், தமிழக மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெறுவதில்லை. அதனால், மருத்துவ படிப்பிலும், தேசிய உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., யிலும், தமிழக மாணவர் சேர்க்கை குறைகிறது. இந்த நிலையைப் போக்க, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த, போட்டி தேர்வு பயிற்சி ஆசிரியர்களை அழைத்து வர, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அவர்கள் வாயிலாக, தமிழக ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை பெறும், தமிழக ஆசிரியர்கள், பிளஸ் ௧, பிளஸ் ௨ மாணவர்களுக்கு, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ளனர்.
இந்த பயிற்சி திட்டம், அடுத்த மாதம் துவங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக