லேபிள்கள்

25.9.17

திறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது: தேர்வுக்குழுவை நியமித்த கல்வித்துறை

தமிழ் வழியில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மாவட்டந்தோறும் தலா 40 மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது', சான்றிதழ் வழங்கி கவுரவிக்க முடிவு செய்த பள்ளிக் கல்வித்துறை, மாவட்டந்தோறும் அதற்கான தேர்வுக் குழுவை நியமித்துள்ளது. 

பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் செயலாளர் உதயச்சந்திரன் உத்தரவில் 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலானது. அதன்பின், தொடர்ந்து பல மாறுதல்கள் நடந்து வருகின்றன.காமராஜர் விருது: பள்ளிக் கல்வித்துறையில் இதற்கு முன், பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அவர்களில் சிறந்த மாணவர்கள் தாங்கள் விரும்பும் பள்ளியில் சேரவும் அரசு சலுகை வழங்கியது.

தற்போது, தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவர்களை பள்ளி முதல்வரின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வுக்குழு தேர்ந்தெடுக்க உள்ளது. தேர்வுக்குழுவினர் 60 சதவீதம் மதிப்பெண் திறனுடன், கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் இணைச் செயல்பாடுகள் என்ற நான்கு தனித்திறன்களுக்கு தலா 10 சதவீத மதிப்பெண் என மொத்த 100 சதவீதம் மதிப்பெண் அளித்து, மாணவ மாணவிகளை தேர்வு செய்ய உள்ளனர்.தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகள் 'பெருந்தலைவர் காமராஜர் விருது' மற்றும் ரொக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர்.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது:அரசு பள்ளி மாணவ மாணவிகளின் திறன்களை ஊக்குவிக்க இந்த திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்குழுவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர், கல்வியாளர்கள் இருவர் என தேர்வுக்குழுவினர் மாணவ மாணவிகளை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு குழுவின் இறுதிப்பட்டியலை, பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள் ளது. தேர்வு செய்யப்படும் பத்தாம் வகுப்பு மாணவருக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ் 2 மாணவருக்கு ரூ.20 ஆயிரமும் விருது வழங்கப்பட உள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக