லேபிள்கள்

28.9.17

7-வது சம்பள கமிஷன் தொடர்பான அலுவலர்குழு அறிக்கை தாக்கல்

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான அலுவலர் குழுவின் அறிக்கை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது, ஏழாவது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிப்பது, அதைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் வழங்குவது, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குவது என்ற நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் ஆசிரியர்கள் போராட்டத்தை அறிவித்தனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஊதிய விகிதத்தை திருத்தியமைப்பது, இடைக்கால நிவாரணம் வழங்குவது, காலமுறை ஊதியத்திற்குப் பதில் முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்றவற்றுக்காக அலுவலர் குழு அமைத்து பரிசீலித்து வருகிறோம். இந்தக் குழு செப்டம்பர் மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும். இதில் மேலும் காலதாமதம் ஏற்படாது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கும். அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பையும் உரிய நேரத்தில் அரசு வெளியிடும் என்று தெரிவித்தார்.

போராட்டம்

ஆனால் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பகுதியினர் 7-ந் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளரை அழைத்து அரசு ஊழியர் தொடர்பாக சில அறிவுரைகளை ஐகோர்ட்டு வழங்கியது. அதைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிக முடிவுக்கு வந்தது.

அறிக்கை சமர்ப்பிப்பு

இந்தநிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அலுவலர் குழு அறிக்கையை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அலுவலர் குழு உறுப்பினர்களான உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, உறுப்பினர் செயலாளர் பி.உமாநாத், சிறப்புப் பணி அலுவலர் பி.ரவி நாராயணன், நிதித்துறை இணைச் செயலாளர் பி.தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

இடைக்கால நிவாரணம்?

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அலுவலர் குழுவால் அளிக்கப்பட்ட அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க சிறிது காலம் ஆகும் என்று தெரிகிறது. எனவே இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 20 சதவீத தொகையை வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை வரும் நவம்பர் மாத இறுதிக்குள் அளிக்கப்படவுள்ளது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என்று தெரிகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக