லேபிள்கள்

15.3.18

10ம் வகுப்பு தேர்வு நாளை துவக்கம் : 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்குகிறது. இதில் 10 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
இத்தேர்வுக்கு தமிழகத்தில் 3,560 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் 48 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தாண்டு, மாணவர்களின் வசதிக்காக அருகருகே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால், 237 தேர்வு மையங்கள், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இத்தேர்வை, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 10 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து, 1,096 பேர் எழுதுகின்றனர். அவர்களில், ஐந்து பேர் திருநங்கையர். ஐந்து லட்சத்து இரண்டாயிரத்து 465 பேர் மாணவியர். இந்த தேர்வில் 3,659 மாற்று திறனாளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் என்றாலும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள, 8,303 மாணவர்கள், அவர்களின் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது, தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம், அரபிக், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் மொழி பாட தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளது. தேர்வு கண்காணிப்புக்கு 6,000 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 6,402 துறை அதிகாரிகளும், 94 ஆயிரத்து, 880 ஆசிரியர்களும், தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் மே, 23ல் வெளியிடப்படுகின்றன.
கட்டுப்பாட்டு அறை திறப்பு : பத்தாம் வகுப்பு மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க 12 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தேர்வுத் துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அறை செயல்படும். தேர்வர்களின் சந்தேகங்களுக்கு, 93854 94105, 93854 94115, 93854 94120, மற்றும், 93854 94125 என்ற, எண்களில் விளக்கம் பெறலாம்.நாளை முதல் ஏப்., 20 வரை, காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, கட்டுப்பாட்டு மையம் இயங்கும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக