பக்கத்துக்கு பக்கம் வண்ண படங்கள், சித்திரங்கள் மற்றும், க்யூ.ஆர்., கோடு என, புதுவிதமாக, தமிழக பாடபுத்தகம் தயாராகியுள்ளது. புத்தகத்தில் பாடமாக மட்டுமின்றி, மொபைல் போனில், 'வீடியோ' வாயிலாகவும் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு: சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்தமிழகத்தில், 13 ஆண்டு களுக்கு பின், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், ஏழு ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு அமல்
புதிய பாடத்திட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு சவால் விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.ஆந்திரா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தையும்,
லண்டன், 'கேம்பிரிட்ஜ்' பாடத்திட்டத்தையும் கலந்து தயாரிக்கப்பட்டு உள்ளது.
புதிய பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள், பல உயர்கல்வி நிறுவன பேராசிரியர்களின், நேரடி மேற்பார்வையில் உருவாகி வருகின்றன.முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது.
அதேநேரம், இரண்டு, மூன்று, நான்கு வகுப்புகளுக்கான பாட புத்தகங்களும் தயாராகி உள்ளன. இந்த பாட புத்தகங்களில், வண்ண படங்கள், சித்திரங்கள், பார்கோடு என, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு பக்கத்திலும், பாடங்கள் அருகே, அதற்கான படங்களை வீடியோவாக பார்க்க, டிஜிட்டல் குறியீடு மற்றும் க்யூ.ஆர்., கோடு குறிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீடுகளை, மொபைல் போன், 'ஆப்' பயன்படுத்தி, ஸ்கேன் செய்து வீடியோவாக பார்க்கலாம்.
செய்முறை
அதேபோல், பாட புத்த கத்தின் முடிவில், 'ஆக்டிவிட்டீஸ்' என்ற, செய்முறை இடம் பெற்றுள்ளது.
இந்த செய்முறையை பயன்படுத்தி, வினாக்களை கேட்கும் முறை நடைமுறைக்கு வருகிறது. பாடங்களில் இடம் பெற்றுள்ள, பெரும்பாலான அம்சங்களில், வண்ண புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரோபாட்டிக், ரசாயன, வேதியியல், சோலார் பேமிலி என்ற சூரிய குடும்பம் குறித்து, மூன்றாம் வகுப்பில் இருந்தே, பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றக்கூடிய, மத்திய அரசின், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், தமிழகத்தின் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அமைந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக