பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தில் தொடர் பயிற்சி, வினாக்களைப் புரிந்துகொண்டு எழுதுவது, பிழைகளைக் கவனத்துடன் தவிர்ப்பது ஆகியவற்றைப் பின்பற்றினால் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.
ஆங்கிலம் முதல் தாள்
தவிர்க்க வேண்டிய தவறுகள்
ஒரு மதிப்பெண் வினாக்களில் பதில்களை எடுத்து எழுதும்போது சரியான தெரிவை (option) a,b,c அல்லது d எனக் குறிப்பிட்டுப் பதில் எழுதுவதும் கடைசியாக அவற்றைச் சரிபார்ப்பதும் நல்லது. கேட்கப்பட்ட எண்ணிக்கைக்கு அப்பால் அனைத்து வினாக்களுக்கும் பதில் அளித்தல், மனப்பாடப் பாடல் எழுத நன்றாகத் தெரியும் என்பதற்காக முழுப் பாடலையும் எழுதுதல் போன்றவை நேர விரயம்.
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து விடையளிக்கும் Comprehension பகுதியில் (வி.எண்.51), முதல் வினாவுக்கான விடையைப் பத்தியின் தொடக்க வரிகளிலும், கடைசி வினாவுக்கான விடையைப் பத்தியின் கடைசி வரிகளிலுமாக, மாணவர்கள் தவறான தேடல் மேற்கொள்கிறார்கள். பத்தியையும் குறிப்பிட்ட வினாவையும் முழுமையாக வாசித்துப் புரிந்துகொண்ட பின்னர், பத்தியில் சரியான இடத்திலிருந்து விடையை அடையாளம் கண்டு எழுதப் பழக வேண்டும்.
அதிக மதிப்பெண்களுக்கு
இலக்கணப் பகுதி வினாக்களுக்கு (வி.எண்.15-30) முந்தைய வருடங்களின் வினாத்தாள்களில் இருந்து பயிற்சி பெறுவது நல்லது. கணிதப் பாடம் போன்றே இலக்கணத்துக்கென அமைந்த சில எளிய சூத்திரங்களை நினைவில்கொள்வதும் நல்லது.
வி.எண்.52, Spot and Correct the Error எளிதான பகுதி என்று பிழைகளை அடையாளம் காட்டுவதுடன் விடையை முடித்துவிடுகிறார்கள். பிழைகளை நீக்கி வாக்கியங்களை எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் கிடைக்கும். வி.எண்.53, (Picture Comprehension) படத்தின் கீழுள்ள வினாக்களுக்கு விடையளிப்பதில், இலக்கணப் பிழைகளைத் தவிர்த்தால் மட்டுமே 5 மதிப்பெண் கிடைக்கும்.
ஓரிரு வார்த்தைகளைப் பார்த்ததும் அவசரப்பட்டு விடையை முடிவு செய்தல் கூடாது. குறிப்பாக, வி.எண்.14 இம்மாதிரியான தவறுகளுக்கு இடமளிக்கிறது.
சரியான விடையை, மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வரிகளில் மட்டும் எழுதுங்கள். 2 மதிப்பெண் வினாக்களை அதிகபட்சம் 30 வார்த்தைகளுக்குள்ளும், வி.எண்கள் 38, 50 ஆகியவற்றை 120 வார்த்தைகளுக்குள்ளும் எழுதினால் போதும்.
தேர்ச்சி எளிது
இப்போதிருந்து படிக்கத் தொடங்கினால்கூட ஆங்கிலம் முதல் தாளில் 35 முதல் 50 மதிப்பெண்கள் எடுத்துவிடலாம்.
Prose, Poem ஆகியவற்றின் தலா முதல் மூன்று பாடங்களில் இருந்து 5 மதிப்பெண்களுக்குரிய Paragraphs படிப்பதுடன், அவற்றைப் பிழையின்றி எழுதிப் பழகுங்கள். இதேபோல முதல் 2 மனப்பாடப் பாடல்களில் பயிற்சி இருந்தால், அப்பகுதிக்கான மதிப்பெண்ணைப் பெற்றுவிடலாம். இலக்கணப் பகுதியில் If Clause, Degrees of Comparisons, Combining the sentences, Punctuation ஆகியவற்றைப் படித்தால் 6 முதல் 11 மதிப்பெண்கள் எளிதில் பெறலாம்.
முதல் 3 பாடங்களின் இரண்டு மதிப்பெண் வினாக்களைப் படித்தாலே 4 அல்லது 6 மதிப்பெண்கள் உறுதி. எஞ்சிய பாடங்களின் 2 மதிப்பெண் வினாக்களை ஏற்கெனவே படித்த Paragraphs பகுதியிலிருந்தே எதிர்கொள்ளலாம். Rhyming words, Rhyme scheme, figure of speech ஆகியவற்றில் ஆசிரியர் அல்லது நன்றாகப் படிக்கும் சக மாணவர் உதவியுடன் ஓரிரு மணி நேரம் ஒதுக்கிப் பார்த்தாலே முடித்துவிடலாம்.
ஓரளவு பயிற்சியின் மூலமே Language Functions (வி.எண் 51-53) பிரிவில் 10-லிருந்து 15 மதிப்பெண்கள்வரை எடுக்கலாம்.
தேர்வறைக் கவனக் குறிப்புகள்
தெளிவான கையெழுத்தில் அடித்தல் திருத்தல் இன்றி எழுதுதல், அடுத்தடுத்த விடைகளுக்கிடையே போதிய இடைவெளியிட்டு எழுதுதல் அவசியம். வி.எண். 38, 50 ஆகியவற்றில் விடைகளின் தொடக்கத்தில் Synopsis எழுதுவதுடன், முடிவில் பொருத்தமான Proverb ஒன்றை எழுதிக் கட்டமிடுவது நல்லது. Rhyming words, Rhyme scheme, alliteration போன்றவற்றை எழுதி, பென்சிலால் அடிக்கோடிட்டும் காட்டலாம். Punctuation பகுதியில் பொருத்தமான குறிகளை, பென்சில் அல்லது கறுப்பு மை பேனாவைக் கொண்டு தனித்துக் காட்டலாம்.
வெளியிலிருந்தும் வினா
முதல் தாளில் சில வினாக்கள் பாடநூலுக்கு வெளியிலிருந்தும் கேட்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, வி.எண் 3 (Expansion), வி.எண் 5 (American/British English), வி.எண் 7 (Singular/Plural) போன்றவற்றைச் சொல்லலாம். ஆங்கில இலக்கணத்தின் பயன்பாடு, பொருளை நன்றாகப் புரிந்துகொள்வதும், விடையளிப்பதில் போதிய பயிற்சி கொண்டிருப்பதும் மட்டுமே இவ்வினாக்களுக்கு எளிதில் விடையளிக்க உதவும்.
இதுபோன்றே மாணவரின் இலக்கண அறிவு, மொழித் திறனைப் பரிசோதிக்கும் வினாக்களும் கணிசமாக உள்ளன. வி.எண் 9 (Phrasal Verb), வி.எண் 20 (Prepositional Phrase), வி.எண் 22 (Choose the correct phrase) ஆகியவை இவற்றில் அடங்கும். முந்தைய வருட வினாத்தாள்களில் இருந்து மேற்கொள்ளப்படும் திருப்புதல்கள் இவற்றுக்குக் கைகொடுக்கும்.
ஆங்கிலம் இரண்டாம் தாள்
முதல் தாளைவிட, 19 வினாக்கள் மட்டுமே அடங்கிய இரண்டாம் தாள் எளிமையாக அமைந்திருக்கும். 40 மதிப்பெண்கள்வரை இதில் சுலபமாகப் பெறலாம். ஆனால், மேலதிக மதிப்பெண்களைப் பெற விரும்பினால், முதல் தாளைவிட இதில் கூடுதல் கவனம் தேவை.
கதையும் உட்கூறுகளும்
வி.எண்.1-7, துணைப்பாடப் பகுதியில் அனைத்துக் கதைகளையும் வரிவிடாது வாசித்துப் புரிந்துவைத்திருப்பது அவசியம். கதைகள்தோறும் இடம்பெறும் கதாபாத்திரங்கள், அவர்களின் வயது, பேசும் வசனங்கள் (மேற்கோள்குறிகளுடன் உள்ளவை), கதை நிகழ்விடம் என அனைத்தையும் குறிப்பெடுத்து வரிசைப்படுத்தி வைத்துக்கொண்டு அவற்றில் பயிற்சி பெற்றால் முழு மதிப்பெண்களைப் பெறலாம். குறிப்பாக, (வி.எண் 6) மனவரைபடத்தைப் பூர்த்தி செய்வதில் இந்தத் தயாரிப்பு மிகவும் உதவும்.
இலக்கணப் பிழைகள் தவிர்க்க
10 மதிப்பெண்கள் அடங்கிய வி.எண்.8, Notes எழுதுகையில் Primary Notes, Secondary Notes என்றோ ஆங்காங்கே கோடிடும் குறிப்புகளாக மொத்தமாகவோ எழுதலாம். அதுவே Summary எழுதுகையில் Rough Copy முடித்து, Fair Copy எழுதும்போது ஏற்படும் இலக்கணப் பிழைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பதால் அவற்றில் கவனம் தேவை. வி.எண்கள் 9,10,11,13,15 ஆகியவற்றுக்குப் பதில் எழுதும்போதும் இலக்கணப் பிழைகளைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் தேவை.
வி.எண்.12, விளம்பரம் தயார் செய்வதில் எழுதுவதற்கு நீலம், கறுப்பு நிறப் பேனாக்களையும் படம் வரைதல், அடிக்கோடு இடுதலில் பென்சிலையும் பயன்படுத்தினால் போதுமானது.
வினாத் தேர்வில் கவனம்
வினா எண் 13-ல் கொடுக்கப்பட்ட தலைப்புச் செய்திகளை விரிவாக்கம் செய்யும்போது, செய்தி நிகழ்ந்த நாள், இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலக்கணப் பிழையின்றி எழுத வேண்டும். கூடவே PM, CM போன்ற abbriviations உள்ளிட்டவற்றை முழுமையாக எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண்கள் கிட்டும். வி.எண்.15-க்கு விடையளிக்கும்போது பொருத்தமான தலைப்புடன் ஓரிரு பத்திகளில் பதில் எழுதி, நிறைவாக ஒரு பழமொழியையும் எழுதுங்கள்.
16, 17,18 வினாக்களுக்கு ஆர்வத்துடன் பயிற்சி பெற்றால் முழு மதிப்பெண் பெறலாம். வி.எண் 19-ல் இடம்பெறும் A, B என 2 வினாக்களில், மொழிபெயர்ப்பில் நல்ல திறமையும் எழுத்து, இலக்கணப் பிழையின்றி எழுதப் பயிற்சி பெற்ற மாணவர்கள் மட்டும் வினா A- வைத் தேர்ந்தெடுக்கலாம். மற்றவர்கள் வினா B-ஐத் தேர்வுசெய்து, கொடுக்கப்பட்ட படம் குறித்து 5- 10 வரிகளுக்குள்ளாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தலாம்.
பாடக் குறிப்புகளை வழங்கியவர்:முனைவர் பு.ஜெயபிரபு.
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), அரசு உயர் நிலைப்பள்ளி,
பூண்டி, தஞ்சாவூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக