பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று 16/03/2018 அன்று துவங்கி 20/04/2018 வரை நடைபெறவுள்ளது. தமிழகம், புதுச்சேரி என இந்தத் தேர்வை 10 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதில் தேர்வு எழுதும் 186 சிறை கைதிகள் மற்றும் 3,659 மாற்றுத் திறனாளிகளுக்கு எனப் பிரத்தியேக ஏற்பாடுகளைத் தேர்வு துறை செய்துள்ளது.
சிறை கைதிகள்:
இவ்வாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புழல் ஆகிய சிறைகளிலுள்ள 186 சிறைவாசிகள் எழுதுகிறார்கள். இவர்களுக்கான தேர்வு மையங்கள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணாக்கருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து அரசு விலக்களித்து உள்ளதால், தமிழ் வழியில் பயின்ற இவர்களிடமும் தேர்வு கட்டணம் வசூலிக்கப் படவில்லை. இவ்வாண்டு தமிழ் வழியில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இவர்களுடன் சேர்த்து 5,55,621 ஆகும்.
மாற்றுத் திறனாளி தேர்வர்கள்:
டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்கள், கண்பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குத் தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் கூடுதல் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 3,659 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 1898 பேருக்குச் சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அதைத் தவிர 1067 மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு மொழிப்பாடத்தில் இருந்தும் விலக்களிக்கப் பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக