லேபிள்கள்

13.3.18

கலங்கடித்தது பிளஸ் 2 கணிதம்; மனப்பாட மாணவர்களுக்கு, 'செக்'

பிளஸ் 2வுக்கு, நேற்று நடந்த கணித தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால், 200க்கு, 200 மதிப்பெண் எடுப்போர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய கணித தேர்வின் வினாத்தாள், சராசரி மாணவர்களால், அதிக மதிப்பெண் எடுக்க முடியாத வகையில் அமைந்து உள்ளது. மொத்தம், 200 மதிப்பெண்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண்ணில், 40 கேள்விகள்; ஆறு மதிப்பெண்களில், 10 கேள்விகள் மற்றும், 10 மதிப்பெண்களில், 10 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். 

அவற்றில், 10 மதிப்பெண் கேள்விகள் மட்டும், மாணவர்களுக்கு எளிதாக அமைந்திருந்தன. மற்ற கேள்விகளுக்கு விடை எழுத, மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டது.அதாவது, 40 ஒரு மதிப்பெண் கேள்விகளில், 30 கேள்விகள், பாடத்தின் பின்பக்க கேள்வி பட்டியலில் இருந்தும்; 10 கேள்விகள், 'கம் புக்' எனப்படும், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் புத்தகத்தில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன.

அவற்றில், அனைத்து கேள்விகளுக்கான விடைக்குறிப்புகளும், புத்தகத்தில் இருப்பதை போல இல்லாமல், வினாத்தாளில் வரிசை மாற்றி கேட்கப்பட்டிருந்தன. அதனால், மனப்பாடமாக விடைகளை படித்திருந்த மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்ய திணறினர்.

அதேபோல, ஆறு மதிப்பெண்களுக்கான பிரிவில், ஒரு கேள்விக்கு, கட்டாயமாக பதில் எழுத வேண்டும். இந்த பிரிவில், 'சாய்ஸ்' அடிப்படையில், 15 கேள்விகளில், ஒன்பது கேள்விகளுக்கு விடை எழுத வேண்டும். அவற்றில், ஐந்து கேள்விகள் மட்டுமே, மாணவர்கள் விடை எழுதுவதற்கு எளிதாக இருந்தன.

இது குறித்து, சென்னை, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர், ராஜ் கூறியதாவது: ஏற்கனவே அமலில் உள்ள, 'ப்ளூ பிரின்டில்' இருந்து மாறாமல், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆறு மதிப்பெண் மற்றும், 10 மதிப்பெண்களில், தலா, ஒரு கேள்வி, மாணவர்களின், 'சென்டம்' மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் வகையில், புதிய கேள்வியாக இடம்பெற்றன. 

பெரும்பாலான கேள்விகள், இதுவரை, பொதுத் தேர்வுகளில் கேட்கப்படாதவையாக இருந்தன.மாணவர்களின் மனப்பாட கல்வியை மாற்றும் வகையில், ஒரு மதிப்பெண் கேள்விகள் இருந்தன. அந்த கேள்விகளின், விடைக்குறிப்புகளில் தவறு இல்லை. 

ஆனால், புத்தகத்தில் உள்ளது போன்று இல்லாமல், வரிசை முறை மட்டும் மாறியிருந்தன. வினாத்தாளை பொறுத்தவரை, மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், தரமாக இருந்தது. பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள், 'சென்டம்' பெறுவதில் சிரமம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


விலங்கியலும் கடினம்!

பிளஸ் 2 விலங்கியல் தேர்விலும், சில கடினமான கேள்விகள் இடம் பெற்றுள்ளன.பிளஸ் 2 தேர்வில், நேற்று விலங்கியல் பாட தேர்வும் நடந்தது. விலங்கியல் வினாத்தாளில், பல கேள்விகள் சிந்தனை திறனை சோதிக்கும் வகையில் இருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகளில், 6, 7, 23 ஆகிய கேள்விகளுக்கு, விடைகளை கண்டுபிடிக்க, மாணவர்கள் சிரமப்பட்டனர். ஐந்து மதிப்பெண்களில், 'கார்போஹைட்ரேட்ஸ்' வகைகள் குறித்த கேள்வி இடம்பெற்றது. இதற்கு, நீண்ட பதிலை எழுத வேண்டியிருந்ததால், மாணவர்களுக்கு நேர பற்றாக்குறை ஏற்பட்டது.

இது குறித்து, சென்னை, எம்.சி.டி.எம்.முத்தையா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விலங்கியல் ஆசிரியர், சவுந்தரபாண்டியன் கூறுகையில், ''பெரும்பாலான கேள்விகள், பல முறை கேட்கப்பட்டவை. அதனால், வினா வங்கியை படித்தவர்களும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றியவர்களும், அதிக மதிப்பெண் பெற முடியும். 10 மதிப்பெண்களுக்கான பிரிவில், 65 மற்றும், 70ம் எண் கேள்விகள், மாணவர்களை சிந்தித்து, பதில் எழுத வைப்பதாக இருந்தன,'' என்றார்.

23 பேர், 'காப்பி'

நேற்றைய தேர்வில், 23 மாணவர்கள் காப்பியடித்து பிடிபட்டனர். அவர்களில், 18 பேர் கணித தேர்விலும், ஐந்து பேர் விலங்கியல் தேர்விலும் சிக்கினர். அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தில், எட்டு மாணவர்களும், ஏழு தனித்தேர்வர்களும் பிடிபட்டனர். திருச்சியில், ஏழு பேர், சேலத்தில் ஒருவர் சிக்கியதாக, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக